செங்கல்பட்டு:கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
செங்கல்பட்டு, பரனுார் பகுதியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், 2.58 ஏக்கர் பரப்பளவில், சுயநிதி திட்டத்தில், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 116 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது.
இதில், மத்திய வருவாய் பிரிவினருக்கு, 90 வீடுகள்; வருவாய் குறைந்தவர்களுக்கு, 26 வீடுகள் என, 116 வீடுகள் ஒதுக்கப்பட உள்ளன. இப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இப்பணிகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, நேற்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, சப்- - கலெக்டர் ஷஜீவனா, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, காட்டாங்கொளத்துார் ஒன்றிய குழு தலைவர் உதயா உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:
பரனுாரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டட பணிகள், 80 சதவீதம் முடிந்துள்ளது. மார்ச் மாதத்திற்குள், மக்களின் பயன்பாட்டிற்கு வரும்.
வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள், 121 இடங்களில் உள்ளன. இதில், 61 இடங்களில், பத்தாயிரம் குடியிருப்புகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்துள்ளன. அவற்றை மறு சீரமைக்க வேண்டிய நிலை உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், பொங்கலுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.