திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கண்ணகப்பட்டு, சிதம்பர சுவாமிகள் மடத்தை ஒட்டி, குளம் ஒன்று உள்ளது.
நேற்று முன்தினம், மாலை 3:00 மணிக்கு, கேளம்பாக்கம் ஊராட்சி, சாத்தங்குப்பம் பகுதியை சேர்ந்த தனியார் கல்லுாரி மாணவர்கள் முகேஷ், 18, உதயகுமார், 19, விஜய், 19, ஆகிய மூவரும், குளத்தில் மூழ்கி இறந்தனர்.
மூன்று பேரின் சடலங்களையும், சிறுசேரி தீயணைப்பு துறையினர் மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். திருப்போரூர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வேண்டி, திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி, தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்து, தலா 2 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்குவதாக அறிவித்தார்.