புழல்:சிறையில் உள்ள கணவருக்கு, பிஸ்கட் பாக்கெட்டில், 'கஞ்சா' வைத்து கொடுத்த மனைவி சிக்கினார்.
சென்னை அடுத்த கோவிலம்பாக்கம், நன்மங்கலத்தைச் சேர்ந்தவர் புருசோத்தமன், 28. இவர், குற்ற வழக்கு தொடர்பாக, பள்ளிக்கரணை போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது மனைவி சாவித்திரி, 22. நேற்று காலை, கணவரை சந்திக்க, சிறைக்கு சென்றார். அப்போது, கணவருக்கு பிஸ்கட், பழம் ஆகியவற்றை கொடுத்தார். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த சிறைக்காவலர்கள், பிஸ்கட் பாக்கெட்டை சோதனையிட்டனர்.
அதில், பிஸ்கட்டுக்கு இடையில், 5 கிராம் கஞ்சா ஒட்டி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து, சிறை கூடுதல் கண்காணிப்பாளர் தர்மராஜ், புழல் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல், நேற்று காலை 11:00 மணி அளவில், புழல் சிறை கண்காணிப்பு கோபுரம் அருகே, சிறை காவலர்கள் ரோந்து பணியில் இருந்தனர்.
அப்போது, சிறை வளாகத்தின் சுற்றுச்சுவர் அருகே, பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட, 'பார்சல்' கிடந்தது.
அதை எடுத்து, பிரித்து பார்த்தபோது, அதில், மொபைல் போன், சிம் கார்டு, சார்ஜர் ஆகியவற்றுடன், 100 கிராம் மூக்கு பொடியும் இருந்தது.
கஞ்சாவை போன்று, பொடி போடும் பழக்கத்திற்கு ஆளான கைதிக்காக, அந்த 'பார்சல்' வீசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதை வீசியவர்கள் குறித்து, கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து சிறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.