ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மோசடியில் ஈடுபட்ட இரு வி.ஏ.ஓ.,க்களை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஆட்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில், ராணிப்பேட்டை மாவட்டம், தென் கடப்பந்தாங்கல், நெமிலி, காவேரிப்பாக்கம் என, 10க்கும் மேற்பட்ட பகுதிகளில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டன.
இங்கு, நெல் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது.
நெல் வியாபாரிகள் சிலர், வெளி மாநிலங்களில் இருந்து தரம் குறைந்த நெல்லை, குறைவான விலைக்கு வாங்கி, வி.ஏ.ஓ.,க்களிடம், விவசாயிகள் என, போலி சான்றிதழ் பெற்று, நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று மானியம் பெற்று வந்தனர்.
இதற்கு, நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து, ஏராளமான புகார்கள் அரசுக்கு சென்றன. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இது குறித்து, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
வேலுார் மாவட்ட, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடத்திய விசாரணையில், விவசாயிகள் என்ற பெயரில் வியாபாரிகள், நெல் விற்பனை செய்து முறைகேடாக, 8 கோடி ரூபாய் அளவுக்கு மானியம் பெற்றதும், இதற்கு கொள்முதல் நிலைய அதிகாரிகள், வி.ஏ.ஓ.,க்கள், நெல் வியாபாரிகள் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
வழக்கு பதிந்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், மோசடியில் ஈடுபட்ட நான்கு பேரை ஏப்ரலில் கைது செய்தனர்.
இந்நிலையில், வியாபாரிகளுக்கு போலி சான்றிதழ் வழங்கிய, வி.ஏ.ஓ.,க்களான ராணிப்பேட்டை மாவட்டம், சிறுகரும்பூர் குமரவேல்பாண்டியன், 45, மேல்பாக்கம் குமரவேல், 40, ஆகியோரை நேற்று கைது செய்து, வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.