ராமநாதபுரம்:''பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் ரூ.3.9 லட்சம் கோடி மதிப்புள்ள 11.21 கோடி டன் அரிசி, கோதுமை வழங்கப்பட்டுள்ளது,'' என, ராமநாதபுரத்தில் இந்திய உணவுக் கழகத்தின் தூத்துக்குடி மண்டல மேலாளர் பப்பால்பீர் சிங் தெரிவித்தார்.
இந்திய உணவுக் கழகத்தின் மூலம் சேமித்து வைக்கப்படும் தானியங்களின் தரம், கோடவுன்களின் பாதுகாப்பு, கண்காணிப்பு முறைகள் குறித்த வெளிப்படை தன்மை அவசியம் என்ற நோக்கத்தில் மண்டல மேலாளர் முன்னிலையில் ராமநாதபுரம் கோடவுனில் இந்த ஆய்வு நடந்தது.
கோடவுனில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, கோதுமையின் தரம் பரிசோதிக்கப்பட்டது. அவற்றை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள முறை, சி.சி.டிவி., மூலம் 24 மணி நேர கண்காணிப்பு செயல்பாடுகள், பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பின் மண்டல மேலாளர் பப்பால்பீர் சிங் கூறியதாவது: பத்து மாவட்டங்களுக்கான இந்திய உணவுக் கழகத்தின் தலைமை மண்டல அலுவலகம் தூத்துக்குடியில் செயல்படுகிறது. இந்த மண்டலத்திற்கு இரண்டு கோடவுன்கள் ராமநாதபுரம், தூத்துக்குடியில் உள்ளன.
பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் 2020 முதல் இதுவரை ஒவ்வொரு நிலைகளாக 7 நிலைகளில் ரூ.3.9 லட்சம் கோடி மதிப்புள்ள 11.21 கோடி டன் அரிசி, கோதுமை நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மண்டலத்தில் மட்டும் 12.46 லட்சம் டன் அரிசியும், 67 ஆயிரம் டன் கோதுமையும் 1.85 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கோடவுன்கள் அனைத்தும் ஆன்-லைனில் இணைக்கப்பட்டதால் அனைத்து தகவல்களும் பேப்பர் பயன்பாடின்றியும், வெளிப்படை தன்மையுடன் கிடைக்கிறது. பில்கள் அனைத்தும் டிராக்கிங் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் எவ்வித சந்தேகத்திற்கும் இடமளிப்பதில்லை.
அனைத்து கோடவுன்களும் கிட்டங்கி ஒழுங்கு முறை ஆணையத்தில்(டபிள்யூ.டி.ஆர்.ஏ.,) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தரக்கட்டுப்பாட்டு மையத்தினர் பல்வேறு வழிமுறைகளின் படி ஆய்வு நடத்தியதில் ராமநாதபுரம் இந்திய உணவு கழகத்தின் கோடவுனுக்கு 5 நட்சத்திர தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது, என்றார்.
ஒப்பந்தங்கள் நிறுவுதல் பிரிவு மேலாளர் சிவராஜ், தானியங்கள் இடமாற்ற பிரிவு மேலாளர் நிலோபர்ஷா, எப்.சி.ஐ., பொறுப்பாளர் கார்த்திகேயன், தரக்கட்டுப்பாட்டு மேலாளர் ரவி உடன் இருந்தனர்.