பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதால், கோவை அரசு மருத்துவமனையில் கட்டண வார்டுகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.
கோவை அரசு மருத்துவமனைக்குதினமும் பல ஆயிரம் பேர் வருகின்றனர்.தரமான சிகிச்சை கிடைத்தாலும், மருத்துவமனையில் சுகாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது.
இதனால், மருத்துவமனைக்கு வரநடுத்தர மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். மாநில சுகாதார துறை சார்பில், 'பே வார்டு' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சென்னை ராஜீவ்காந்தி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில், கட்டண சிகிச்சை பிரிவு செயல்படுகிறது.
கோவை, சேலம், மதுரை அரசு மருத்துவமனைகளில், கட்டண வார்டுகள் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு மட்டும், ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கின. தற்போது பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதால், கட்டண வார்டு விரைவில் பயன்பாட்டுக்கு வரஉள்ளது.
மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''மருத்துவமனையின் நூற்றாண்டு விழா கட்டடத்தின் முதல் தளத்தில், கட்டண சிகிச்சை வார்டுக்கான பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம் 16 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.
இதில், 6 தனி அறைகள் அடங்கும். இவற்றில் கழிப்பிடம், இருக்கை, 'டிவி' உள்ளிட்டவை இருக்கும். தவிர, இரண்டு பேர் தங்கும் வகையில், 5 இரட்டை படுக்கை அறைகள் அமைக்கப்பட்டுவருகிறது.
இவற்றில், கழிப்பிடம் பொது என்றாலும், உடை மாற்றும் வசதிகள் உள்ளிட்டவை தனித்தனியாக இருக்கும். பொது சிகிச்சை வார்டில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன.
மகப்பேறு சிகிச்சைக்காக, 11 படுக்கைகள் கொண்ட பிரத்யேக கட்டண சிகிச்சை வார்டும் தயாராகி வருகிறது. விரைவில் வார்டுகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன,'' என்றார்.