திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து சாலைகள் குறுகுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலுார் நகரின் மத்தியில் உலகளந்த பெருமாள் கோவில், ஈசானிய மூலையில் வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. நீர் மேலாண்மையை சிறப்புற பராமரிக்கும் வகையில் ஊருக்கு மத்தியில் 2 குளங்கள், பக்தர்கள் தங்குவதற்கான மடங்கள், நந்தவனங்கள் என திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் ஆகும்.
நகரில் நாளுக்கு நாள் பெருகி விட்ட வாகனங்களாலும், வணிக நிறுவனங்களாலும் பரந்து விரிந்து காணப்பட்ட சாலைகள் இன்று ஆக்கிரமிப்புகளால் காணாமல் போயுள்ளது.
தெற்கு வீதி, சன்னதி வீதி, கடைவீதிகளில் நிரந்தர ஆக்கிரமிப்புகள் சாலையை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. இவற்றுக்கு மத்தியில் தள்ளுவண்டி வியாபாரிகள், சாலையோர காய்கறி கடைகளின் ஆக்கிரமிப்பும் அதிகமாகியுள்ளது.
இவை எல்லாவற்றிக்கும் மேலாக உலகளந்த பெருமாள் கோவில், வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பல இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தனி நபர்களின் பெயரில் பட்டா மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு வீதி, கடைவீதி, சன்னதி வீதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனை அகற்ற கோர்ட்டும் அவ்வப்போது ஆணை பிறப்பித்திருக்கும் நிலையில், வருவாய்த் துறையினர் அளவீடு செய்து குறியிடுவது கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டு தோறும் நடைபெறும் சம்பிரதாயமாக மாறிப்போனது.
ஆனால், அந்த குறியீட்டு அளவிற்கான நிரந்தர ஆக்கிரமிப்பை அகற்ற எந்த அதிகாரிகளும் இதுவரை முன்வரவில்லை.
பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து ஆர்.டி.ஓ., தலைமையில் பல கூட்டங்கள் நடத்தப்பட்டு விட்டது. ஆனால் அதன் மீதான நடவடிக்கை தான் என்ன என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே உளளது.
பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் பாரபட்சமின்றி நேர்மையுடன் செயல்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.