விருத்தாசலம், : விருத்தாசலம் அனைத்து வழக்கறிஞர்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் விருத்தாசலம் நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் கதிரவன் என்பவர், தனது விவசாய நிலத்தில் இருந்த பயிர்களை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், எதிர் தரப்பினருக்கு சாதகமாக செயல்பட்டதாகவும், இதனை கண்டித்து, நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வழக்கறிஞர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வழக்கறிஞர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சதீஷ்குமார், பார் அசோசியேஷன் தலைவர் அண்ணாமலை, வழக்கறிஞர் சங்கங்களின் செயலர்கள் மணிகண்டன், இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், கருவேப்பிலங்குறிச்சி போலீசாரை கணடித்து, கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. உரிய நடவடிக்கை இல்லையென்றால், இன்று கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட போவதாக கூறி, அனைவரும் கலைந்து சென்றனர்.