மதுரை : மதுரையிலிருந்து துாத்துக்குடிக்கு போலீஸ்காரர் ஸ்ரீமுருகனை இடமாறுதல் செய்த உத்தரவை கர்மா கொள்கையை பின்பற்றி ரத்து செய்தும், மதுரையில் போக்குவரத்து காவலராக நியமிக்கவும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது.
மதுரை ஸ்ரீமுருகன் தாக்கல் செய்த மனு: அவனியாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எழுத்தராக பணிபுரிந்தேன். என்னை துாத்துக்குடி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்து தென்மண்டல போலீஸ் ஐ.ஜி., உத்தரவிட்டார். இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
தனி நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு: மனுதாரர் விபத்தில் சிக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டது. உடல் நலம் பாதித்தது. விதிகளை பின்பற்றாமல் மருத்துவ விடுப்பு எடுத்ததாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் மனுதாரர் பல தண்டனைகளை அனுபவித்தார். மனுதாரர் நேர்மையானவர். உயரதிகாரி அல்லது வேறு யாரின் அழுத்தத்திற்கும் அவர் அடிபணிவதில்லை.
தமிழக அரசு தரப்பு: மனுதாரர் உயரதிகாரிகளை மதிப்பதில்லை. அவருக்கு சம்பள உயர்வு ஒத்திவைக்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக மனுதாரர் துாத்துக்குடிக்கு மாற்றப்பட்டார். இவ்வாறு இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி: கர்மா கொள்கை மூலம் இந்நீதிமன்றம் மனுதாரருக்கு நிவாரணம் வழங்க முன்வருகிறது. கர்மா கொள்கைகளில் 'சஞ்சித கர்மா' (முழு கர்மா), 'பிராரப்த கர்மா' (கர்மாவின் ஒரு பகுதி) எனப் பிரிக்கப்பட்டு, 'பிராரப்த கர்மா'விற்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது. மனுதாரரை தொலைதுார இடத்திற்கு மாற்றுவது பொருளாதார ரீதியாக துயரத்தை அதிகரிக்கும். இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை போக்குவரத்து காவலராக மதுரை மாவட்டத்தில் நியமிக்க ஐ.ஜி.,க்கு உத்தரவிடப்படுகிறது என்றார். இதை எதிர்த்து ஐ.ஜி., மேல்முறையீடு செய்தார்.
தனி நீதிபதியின் உத்தரவிற்கு அக்.,6 ல் நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்தது.ஸ்ரீமுருகன், ''என்னை போக்குவரத்து காவலராக நியமிக்க தனி நீதிபதி உத்தரவிட்டது ஏற்புடையதல்ல. அது வழக்கில் கோரிய நிவாரணத்திற்கு தொடர்பில்லாதது. உத்தரவில் போக்குவரத்து போலீசாக நியமிக்க விதித்த பகுதியை மட்டும் ரத்து செய்ய வேண்டும்,'' என மனு செய்தார்.
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: ஸ்ரீமுருகனுக்கு திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஏதாவது ஒன்றில் பணி ஒதுக்கீடு செய்ய தயார்.
ஸ்ரீமுருகன் தரப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிய தயார். இவ்வாறு இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள்: அரசு தரப்பில் 2 வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இரு தரப்பு மேல்முறையீட்டு மனுக்களும் அனுமதிக்கப்படுகிறது. தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.