மதுரை : மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனை குழுக் கூட்டம் தொடர்ந்து இணையவழியில் நடத்தப்படுவதால் டிச.,12ல் கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணிக்கும் முடிவில் உள்ளனர்.
கொரோனா காரணமாக இதுவரை இணையவழியில் நடந்த நிலையில், வரும் கூட்டமும் இணையவழியில் நடத்தப்படும் என்ற ரயில்வே அறிவிப்பிற்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உறுப்பினர் பாலவேலன் கூறியதாவது:
ரயில்வே வளர்ச்சி, பயணிகள் நலன் கருதி ஆண்டுக்கு குறைந்தது மூன்று கூட்டங்கள் நடத்த வேண்டும். கொரோனா ஊரடங்கால் 2020, 2021 ல் ஒரு கூட்டம் இணையவழியில் நடத்தப்பட்டது. தற்போது 2022, 2023 க்கான புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான அறிமுகக் கூட்டமும் ஜூலை 28ல் இணையவழியில் நடந்தது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு அனைத்து மத்திய, மாநில துறைகளின் நிகழ்ச்சிகள் நேரில் நடக்கின்றன. சென்னை, திருச்சி, சேலம் கோட்ட ஆலோசனை கூட்டங்களும் நேரில் நடந்தது. ஆனால் மதுரைக் கோட்டத்தில் மட்டும் இன்னும் இணையவழியில் நடத்துவது ஏன்.
ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளவர் என்பதால், இக்கூட்டத்தை நேரடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ரயில்வே நிர்வாகத்திடம் கடிதமும் அளித்துள்ளோம். வரும் கூட்டத்தை நேரில் நடத்த வேண்டும். இணையவழியில் நடந்தால் கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவில் உள்ளோம், என்றார்.