திருப்பூர்: திருப்பூரில், பருத்தி நுாலிழை ஆடை உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்தாமல், செயற்கை நுாலிழை ஆடைகள் உற்பத்தியிலும், மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தியும் கவனம் செலுத்த வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பு.
ஜவுளி உற்பத்தியில் முன்னோடியாக இருந்தாலும் கூட, ஜவுளி உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்களுக்கு (அக்சசரீஸ்) சீனாவிடம் இருந்து வாங்க வேண்டிய நிலை இன்றும் தொடர்கிறது. மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தியில், பட்டன், ஜிப், லேஸ், ரோப், ஸ்டோன்ஸ், லேபிள் ஆகிய உதிரி பாகங்கள் பங்களிப்பு அவசியம்.
அதற்காகவே, ஏற்றுமதி ஆடைகள் மட்டுமல்ல, உள்நாட்டு விற்பனை ஆடைகளிலும், உதிரி பாகங்கள் பயன்பாடு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழிலாளர், தொழில் கட்டமைப்பு வசதிகளை பெற்றிருந்தும் கூட, திருப்பூரில், ஜவுளி உற்பத்திக்கான 'அக்சசரீஸ்' உற்பத்தி செய்வதில்லை.
'இம்போர்ட் சப்ஸ்டிடியூட்'
'அக்சசரீஸ்'களை வாங்க, சீனாவிடம் இருந்தும், டில்லியில் உள்ள சில நிறுவனங்களை நம்பியே இருக்க வேண்டியுள்ளது.
புதிய தொழில் முனைவோர்கள் வாயிலாக, 'அக்சசரீஸ்' உற்பத்தி தொழிலை தமிழகத்திலேயே துவக்க, மத்திய அரசு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.
இது குறித்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வாரியம் சார்பில், 'இம்போர்ட் சப்ஸ்டிடியூட்' என்ற திட்டத்தை செயல்படுத்த தீவிர ஆலோசனையில் இருக்கிறது.
தேசிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வாரிய உறுப்பினர் மோகன சுந்தரம் கூறியதாவது:
பனியன் தொழிலில், 'அக்சசரீஸ்' என்பது மிக முக்கியமானது; உள்ளூரில் உற்பத்தி இல்லாததால், டில்லி அல்லது சீனாவில் இருந்து பெறப்படுகிறது. உற்பத்தியாளர் நிர்ணயிப்பதே விலையாக இருக்கிறது; வெகு தொலைவில் இருந்து வாங்கிவர, போக்குவரத்து செலவும் அதிகம் ஏற்படுகிறது.
மானிய தொழில் கடன்
இறக்குமதி செய்யவதற்கு பதிலாக, மாற்று பொருட்களை நாமே உற்பத்தி செய்யலாம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்காக, மத்திய, மாநில அரசுகளின், மானிய தொழிற்கடன் திட்டங்கள் வாயிலாக, 'அக்சசரீஸ்' உற்பத்திக்கான புதிய தொழில் முனைவோரை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பின்தங்கிய கிராமங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில்,' அக்சசரீஸ்' உற்பத்தி தொழிற்சாலை அமைக்க உதவி செய்யப்படும். 'லகு உத்யோக் பாரதி' அமைப்பு வாயிலாகவும், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டம் தொடர்பாக, அரசிடம் பேசி வருகிறோம். இதன்மூலமாக, சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகம் உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.