கரூர், நவ. 30-
கரூர் நகரில், சாலையின் இருபுறமும், பிளாட்பாரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் நடக்க முடியாமல் விபத்தில் சிக்குகின்றனர்.
கரூர் - கோவை சாலை, திண்ணப்பா கார்னர் சாலை, ஜவஹர் பஜார் பகுதியில் சாலையின் இருபுறமும், கடந்த 2017ல் பிளாட்பாரம் அமைக்கப்பட்டது. இதில், பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பிளாட்பாரங்களில் டூவீலர்களை நிறுத்துவது, குறிப்பிட்ட பகுதியில் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், விளம்பர போர்டுகளை வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், கரூர் நகரப் பகுதிகளில், பொதுமக்கள் பிளாட்பாரங்களில் நடந்து செல்ல முடியாமல், சாலைகளில் இறங்கி நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் நடந்து செல்வோர் மீது மோதி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, பிளாட்பாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.