கரூர், நவ. 30-
கரூர் அருகே வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் 'வானவில் மன்றம்' தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து பேசியதாவது:
மாவட்டத்துக்கு உட்பட்ட 58 மேல்நிலைப் பள்ளிகள், 56 உயர்நிலைப் பள்ளிகள், 165 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 279 பள்ளிகளில் 'வானவில் மன்றம்' தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை 25 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
இத்திட்டத்துக்கு, முதல்கட்டமாக கரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு 3 லட்சத்து, 34 ஆயிரத்து, 800 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கணிதம், அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சி இது. அரசுப் பள்ளி மாணவர்கள் அறிவியல் மற்றும் கணித கருத்துகள் குறித்து சிந்திக்கும் சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்ணிச்சாமி, மணிவண்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் கலையரசி உட்பட பலர் பங்கேற்றனர்.