குமாரபாளையம், நவ. 30-
பாலசுப்ரமணி (அ.தி.மு.க.,): எங்கள் பகுதியில், சாலைகள் சேதத்தால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. பல பணிகள் நிலுவை யில் உள்ளன. அதிக நிதி ஒதுக்கீடு செய்யுங்கள். மேலும், கொசு மருந்து அடிக்க வேண்டும்.
வெங்கடேசன் (துணை சேர்மன், தி.மு.க.,): வாட்டர் டேங்க் இடிக்கப்பட்டு, 3 மாதமாகிறது. பொது நிதி இல்லை என்றாலும், குடிநீர் நிதி ஒதுக்கீடு மூலம் பணியை விரைந்து முடித்து தாருங்கள். தெருநாய் தொல்லை
அதிகம் உள்ளது.
புஷ்பா (தி.மு.க.,): நாய்கடிக்கு ஊசி போட, காலை, 7:00 மணிக்கு ஜி.ஹெச்., சென்றால், 9:00 மணிக்குமேல் வாருங்கள் எனக்கூறி, திருப்பி அனுப்புகின்றனர். நினைத்த நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்வதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
புருஷோத்தமன் (அ.தி.மு.க.,): அனைத்து வார்டுகளிலும் என்னென்ன பணிகள் எந்த நிலையில் உள்ளன என, அனைத்து கவுன்சிலருக்கும் தகவல் தெரிவியுங்கள்.
தர்மராஜ் (தி.மு.க.,): நாராயண நகர் ரோடு சேதமாக இருப்பதால், ஷேர் ஆட்டோ ஓட்டுனர் கூட வர மறுக்கின்றனர். சாலை அமைத்து தர வேண்டும்.
கதிரவன் சேகர் (தி.மு.க.,): குடிநீர் வினியோகம் தாறுமாறாக வருவதால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், தண்ணீர் பிடிக்க முடிவது இல்லை. இதை சரி செய்ய வேண்டும். வடிகால், சாலை உள்ளிட்ட பணிகள் செய்து தர வேண்டும்.
விஜய்கண்ணன் (சேர்மன்): நிதி இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தாமல் உள்ளனர். வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குப்பையை குப்பாண்டபாளையம் ஊராட்சியினர், கொட்டுவதாக சுகாதாரத்துறையினர் கூறினீர்கள். ஆனால், அந்த குப்பையை நமது ஆட்கள் தான் கொட்டி வருகின்றனர். கையும் களவுமாக பிடித்த பின் தெரிந்தது. அதனை தீ வைத்து எரிக்கிறீர்கள். முதலில் குப்பையை எடுங்கள். நான் கட்சி பாகுபாடு இல்லாமல் பணி செய்து வருகிறேன்.
செல்வராஜ் (சுகாதார ஆய்வாளர்): உடனே எடுக்க சொல்கிறேன். இனி இவ்வாறு நடக்காமல்
பார்த்துக்கொள்கிறேன்.
ராஜேந்திரன் (பொறியாளர்): அம்மன் நகர் புதிய சாலை அமைக்க இந்த வாரத்தில்
அனுமதி கிடைத்து விடும்.
இவ்வாறு விவாதங்கள்
நடந்தன.