உடுமலை : காய்கறி மற்றும் இதர பொருட்கள் விற்பனையில், விவசாயிகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், ஒன்றிய நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிலுள்ள, வாரச்சந்தை வளாகங்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், விவசாயம் பிரதானமாக உள்ளது. முன்பு, விளைபொருட்களை சிரமமின்றி, விவசாயிகள் சந்தைப்படுத்தும் வகையில், அந்தந்த பகுதிகளில், வாரச்சந்தை செயல்பட்டு வந்தது.
மேலும், ஆடு, மாடு, கோழி விற்பனையும், சந்தைகளில் நடைபெற்றது. காய்கறி மட்டுமல்லாது தானியங்களும், அந்தந்த பகுதிகளில், குடிசை தொழிலாக தயாரிக்கப்படும், பொருட்களும், சந்தைப்படுத்தி வந்தனர்.
இவ்வாறு, வாரச்சந்தைகள் சுற்றுப்பகுதி கிராமங்களின் முக்கிய வர்த்தக மையமாக காணப்பட்டது.
பின்னர், இச்சந்தைகள், சம்பந்தப்பட்ட ஒன்றிய மற்றும் பேரூராட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன.
புதுப்பிப்பது அவசியம்
உடுமலை ஒன்றியத்தில், வாளவாடி; குடிமங்கலம் ஒன்றியத்தில், பூளவாடி, ராமச்சந்திராபுரம்; மடத்துக்குளம் பேரூராட்சி ஆகிய இடங்களில் வாரச்சந்தைகள் செயல்பாட்டில் உள்ளன.
இதில், பூளவாடி வாரச்சந்தை மட்டும் சமீபத்தில், புதுப்பிக்கப்பட்டு, புதிதாக கடைகள் கட்டப்பட்டன.
வாளவாடி சந்தை முன்பு பிரசித்தி பெற்ற சந்தையாக இருந்தது. சுற்றுப்பகுதி விவசாயிகளும், கிராம மக்களும் பயன்பெற்று வந்தனர்.
உடுமலை ஒன்றிய நிர்வாகம், சந்தை வளாக பராமரிப்பை கண்டுகொள்ளவில்லை. இதனால், அங்குள்ள, பழமையான ஓட்டுக்கட்டடம் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது.
பிற கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை. போதிய இடவசதி இருப்பதால், இந்த சந்தையை விரிவுபடுத்த வாய்ப்புகள் அதிகமுள்ளது. குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள ராமச்சந்திராபுரம் வாரச்சந்தை, திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றப்பட்டு, நுகர்வோர், விவசாயிகள் என இரு தரப்பினரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இந்த சந்தைக்கான ஏலம் மட்டும், ஆண்டுதோறும் ஒன்றிய நிர்வாகத்தால் விடப்படுகிறது.
நெடுஞ்சாலையில் சந்தை
மடத்துக்குளத்திலுள்ள சந்தையை, ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். போதிய இடவசதி இல்லாமல், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, வாரச்சந்தை நாளன்று கடைகள் அமைக்கும் நிலை காணப்படுகிறது. நீண்ட காலமாக சந்தை கடைகளுக்கான கட்டமைப்பும் மேம்படுத்தப்படாமல் உள்ளது.
உள்ளாட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிலுள்ள சந்தைகளின் நிலை பரிதாபமாக மாறியுள்ளதால், விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்ய அருகிலுள்ள நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. நுகர்வோரும் பாதிக்கப்படுகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வாக, சந்தையை பயன்படுத்தும், விவசாயிகள், நுகர்வோர் எண்ணிக்கையை கணக்கிட்டு, மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதாரமான முறையில், காய்கறி விற்பனை செய்யும் வகையில், புதிதாக கடைகள் கட்ட வேண்டும்.
மேலும், அதே வளாகத்தில், காய்கறி மற்றும் தானியங்கள் இருப்பு வைப்பதற்கான குடோன்களை ஏற்படுத்தலாம்.
கிராமங்களிலுள்ள வாரச்சந்தைகள் முறையாக செயல்பட்டால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நிரந்தர வருவாய் கிடைக்கும். விவசாயிகளும் நேரடியாக தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்த முடியும்.
தற்போதுள்ள நிலை தொடர்ந்தால், சந்தைகளுக்கான இடம் ஆக்கிரமிக்கப்பட்டு, முற்றிலுமாக காணாமல் போகும் அவலம் ஏற்படும்.
எனவே, இது குறித்து ஒன்றிய நிர்வாகங்கள் வாயிலாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.