கோவை : தொழில்முனையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு, கோவை சூலுார் பாரப்பட்டி ஊராட்சி குளத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்தனர். போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அவர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலாவிடம் வழங்கினர்.
மனுவில் கூறியுள்ளதாவது:
கோவை சூலுார் வாரப்பட்டி, கந்தம்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 421.41 ஏக்கரில் தொழில் வளர்ச்சிக்கழகத்தின் தொழில் முனையம் அமைய உள்ளது. இப்பகுதியில், 2,500 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதிகளில் மழை குறைவு என்பதால் தென்னை, காய்கறி, வாழை உள்ளிட்ட விவசாயத்துடன் ஆடு, மாடு, கோழி வளர்த்து வருகிறோம். இப்பகுதியில் தொழில் வளர்ச்சிக்கழகத்தின் தொழில் முனையம் அமைந்தால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
பவுண்டரிகள் மற்றும் கெமிக்கல் தயாரிப்பு நிறுவனங்கள் வந்தால், அவை வெளியேற்றும் கழிவு நீர் கலந்து, நிலத்தடி நீர் உபயோகமற்றதாக மாறிவிடும்.
அதேபோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே, தொழில் முனையம் அமைப்பதை தவிர்த்து, எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களுடன், டி.ஆர்.ஓ., லீலா பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.