கோவை : தமிழ்வழியில் படித்ததற்கான, சான்றிதழ் கோரும் விண்ணப்பங்களை, எக்காரணம் கொண்டும், கிடப்பில் போடக்கூடாதென, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வியை தமிழ்வழியில் முடித்தோருக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதற்காக, தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழை, பள்ளியில் நேரடியாக சென்று, விண்ணப்பித்தால் மட்டுமே பெற முடியும் என்ற, நிலை நீடித்தது.
இந்நடைமுறை சமீபத்தில் ஆன்லைன் மயமாக்கப்பட்டதோடு, இ-சேவை மையத்தில் இருந்தே, விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விண்ணப்பங்கள், பள்ளியின் 'எமிஸ்' இணையதளத்திற்கு வந்து சேரும். விண்ணப்பதாரர் பதிவேற்றிய சான்றிதழ்களும், பள்ளி பதிவேட்டில் உள்ள சான்றிதழ்களும், சரியாக இருக்கும் பட்சத்தில், ஆன்லைன் மூலமாகவே ஒப்புதல் வழங்கலாம்.
விண்ணப்பத்தை நிராகரிக்கும் பட்சத்தில், உரிய காரணத்தை தெரிவிக்க வேண்டுமென, ஏற்கனவே தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பல பள்ளிகளில் தமிழ்வழி சான்றிதழ் கோரும் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.
இதை தினசரி ஆய்வு செய்து, விரைவில் ஒப்புதல் வழங்க, ஆவண செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,' எமிஸ் இணையதளத்திற்கு வரும் விண்ணப்பங்களை, குறைந்தபட்சம் ஒருவார காலத்திற்குள், ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும், நேரடியாக கையெழுத்திட்டு, சான்றிதழ் வழங்க கூடாதென தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.