உடுமலை, : கல்லாபுரம் விவசாயிகள் கோரிக்கை குறித்த, 'தினமலர்' செய்தி எதிரொலியாக, நெல் கொள்முதல் மையம் அமைக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உடுமலை அமராவதி அணை பழைய ஆயக்கட்டு கல்லாபுரம், ராமகுளம் கால்வாய் வாயிலாக, 3 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அப்பகுதியில், இரண்டாம் போக நெல் சாகுபடி தற்போது தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், அரசு கொள்முதல் மையம் இல்லாததால், வெளிமார்க்கெட்டில், குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்து நஷ்டமடைந்து வருவதாக, அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும், 27 கி.மீ., தொலைவிலுள்ள, கண்ணாடிப்புத்துார் கிராமத்திலுள்ள மையத்துக்கு நெல் கொண்டு செல்வதில், சிரமம் உள்ளது.
எனவே, ருத்ரபாளையத்தில், அரசு நெல் கொள்முதல் மையம் துவக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த செய்தி 'தினமலரில்' நேற்று வெளியானது. இது குறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:
உடுமலை வட்டாரத்தில், காரீப் பருவத்துக்கான நெல் அறுவடை துவங்கியதும், கொள்முதல் மையம் அமைக்க விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
இது குறித்த கருத்துரு, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், மடத்துக்குளம் தாலுகா ருத்ரபாளையத்தில், நேரடி நெல் கொள்முதல் மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மையத்தில், சங்கராமநல்லுார், குமரலிங்கம் மற்றும் கல்லாபுரம் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்து கொள்ளலாம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினரால், நெல் கொள்முதல் செய்யப்படும்.
விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் மையங்களில், விற்பனை செய்யும் முன், மின்னணு நேரடி கொள்முதல் மைய இணையதளத்தில், (e---DPC), பதிவு செய்யவும், உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக விவசாயிகள் தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு, தெரிவித்தனர்.
நடப்பு சீசனில், நெல் விற்பனைக்காக கொள்முதல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.