பொள்ளாச்சி : 'விவசாயிகள் இணையதள சேவையை பயன்படுத்தி, விதைகளின் தரம் குறித்து, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,' என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் நிர்மலா அறிக்கை:
கோவை மாவட்டத்தில் நெல், உளுந்து, பயறு, எள், நிலக்கடலை, பருத்தி மற்றும் காய்கறி பயிர்களில் விதை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
பொதுவாக, இப்பயிர்களில் புறத்துாய்மை, முளைப்புத் திறன், ஈரப்பதம் மற்றும் பிற ரக கலப்பு குறித்த பரிசோதனைகள், விதை பரிசோதனை நிலையத்தில் செய்யப்படுகிறது.
பருவத்துக்கு ஏற்ற நெல் ரகங்களை தேர்வு செய்து விதைக்கும் விவசாயிகள், அந்த ரகங்களின், தரத்தை அறிந்து விதைப்பது மிக அவசியம். விதை பரிசோதனை செய்து, தரமான அதிக முளைப்புத் திறனுடைய விதைகளை விதைத்தால், வயலில் தகுந்த பயிர் எண்ணிக்கையை பராமரித்து, உயர் விளைச்சல் பெறலாம்.
நெல் பயிர் விதைகளை பொறுத்தவரை, பயன்படுத்தப்படும் விதைகளுக்கு, 80 சதவீதம் முளைப்பு திறனும், 98 சதவீதம் புறத்துாய்மையும், ஈரப்பதம் அதிகபட்சம், 13 சதவீதம் வரையும் கட்டாயம் இருக்க வேண்டும்.
தற்போது, 'ஸ்பெக்ஸ்' என்ற இணையதள சேவை வாயிலாக, விதை பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, இணையதளம் வாயிலாக, பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள, தாங்கள் அனுப்பும் விதை குவியல்களில் பயிரின் பெயர், ரகம், குவியல் எண் மற்றும் உற்பத்தி நிலை ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். மேலும், தேவைப்படும் பரிசோதனைகளின் விபரங்களையும், அவசியம் குறிப்பிட வேண்டும்.
ஸ்பெக்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பின், அனுப்ப வேண்டிய விதை பரிசோதனை நிலையம் என்ற காலத்தில், கோவை என்பதை, தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.
அதன் பின், அதன் நகலை பிரின்ட் எடுத்து, 100 கிராம் நெல் விதை மாதிரியுடன், ஒரு விதை மாதிரிக்கு, 80 ரூபாய் வீதம் விதை பரிசோதனை கட்டணமாக, விதை பரிசோதனை நிலையம், கோவை என்ற முகவரியில், நேரில் செலுத்த வேண்டும்.
அதன்பின், முடிவுகளை இணையதளம் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.