குன்னுார்:''டான்டீ நிறுவனத்தை வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது,'' என, சட்டசபை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா எம்.எல்.ஏ., கூறினார்.
நீலகிரி மாவட்டம், குன்னுாரை தலைமையிடமாக கொண்ட, 'டான்டீ' எனும் தமிழக தேயிலை தோட்ட நிறுவனம், நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில், 10 ஆயிரத்து, 949 ஏக்கரில் செயல்படுகிறது.
இதில், 3,800 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிறுவனம் 2008ல் இருந்து, 211 கோடி ரூபாய் நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளது.
இதையடுத்து, கடந்த அக்., 3ம் தேதி, 'கடும் நிதி நெருக்கடியில் இயங்கும் 'டான்டீ' நிறுவனத்தின், 5,318 ஏக்கர் நிலம் மீண்டும் வனத்துறை வசம் ஒப்படைக்கப்படும்' என, மாநில அரசு அரசாணை வெளியிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூடலுாரில் கடந்த 20ம் தேதி பா.ஜ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 'டான்டீ' நிறுவனத்தை செயல்படுத்த முடியாது என மாநில அரசு தெரிவித்தால், மத்திய அரசு எடுத்து நடத்தும் என, மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்தார்.
தொடர்ந்து, டான்டீ யில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, 677 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்து, பயனாளிகள் பங்களிப்பு தொகையான, 13.46 கோடி ரூபாயை ஏற்பதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், நேற்று குன்னுார் டான்டீ தொழிற்சாலையில் சட்டசபை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா தலைமையிலான உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
தலைவர் ராஜா நிருபர்களிடம் கூறுகையில், ''டான்டீ பகுதிகளில் ஆய்வு செய்து, கருத்துகள் முழுமையாக கேட்கப்படும். வனத் துறைக்கு டான்டீ தொழிற்சாலையை ஒப்படைக்கும் முடிவு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.