திருநெல்வேலி:தாமிரபரணி வெள்ள நீர் கால்வாய் திட்டத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு 13 ஆண்டுகளாக இழப்பீடு வழங்காமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மழைக்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர், ஆண்டுதோறும் 50 டி.எம்.சி., தாமிரபரணி நீர் கடலில் வீணாக சேருகிறது.
எனவே வறட்சிப் பகுதிகளுக்கு திருப்பி விடுவதற்காக, 2009ல் தாமிரபரணி வெள்ள நீர் கால்வாய் திட்டம், 369 கோடி ரூபாய் மதிப்பில் துவக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளில் பாதிப் பணிகள் நிறைவுற்ற நிலையில் 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
மீண்டும், பழனிசாமி முதல்வரான பிறகு திட்ட பணிகள் துவங்கின. இருப்பினும், திட்டம் இன்னும் முடியவில்லை.
ஆட்சி மாற்றம், 2021 ஜூனில் ஏற்பட்ட பிறகு, திட்ட மதிப்பீட்டு தொகை 872 கோடி ரூபாயாக அதிகரித்து, தற்போது பணிகள் நடக்கின்றன.
திட்டம், 2009ல் துவங்கும் போது திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே வெள்ளங்குளியிலிருந்து திசையன்விளை அருகே எம்.எல்.தேரி வரை 73 கி.மீ.,க்கு தனியார் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதில் துவக்கம் முதலே இழப்பீட்டுத் தொகை வழங்குவதை அதிகாரிகள் தாமதப்படுத்தினர்.
திருநெல்வேலி அருகே தருவை, முன்னீர் பள்ளம், சேரன்மகாதேவி அருகே கோவில்பத்து இடங்களில் நிலம் தந்தவர்களுக்கு கடந்த ஏப்ரலில் நிலுவைத்தொகை வழங்கப்படும் என கூறியிருந்தனர்; இன்னும் வழங்கவில்லை.
நிதி வழங்குவதற்காக 2020 -- 21ல் அரசு அறிவித்த ஆணை, நிதி ஆண்டுக்குள் செயல்படுத்தாததால் காலாவதி ஆகிவிட்டது. இனி, புதிய ஆணையை அரசு பிறப்பித்தால் மட்டுமே நிதி கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காலாவதியாகும் என தெரிந்தும் வருவாய்த் துறையினரும் பொதுப்பணி துறையினரும் ஏற்படுத்திய தாமதத்தால் தற்போது நிலம் வழங்கிய அப்பாவி பொதுமக்கள் 13 ஆண்டுகளாக காத்திருப்பில் உள்ளனர்.