புதுச்சேரி-இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அரியாங்குப்பத்தை சேர்ந்த 27 வயது இளம் பெண் கடந்த 2015ம் ஆண்டு மே 26ம் தேதி இரவு 9.00 மணிக்கு, தனது கணவரோடு, புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள தியேட்டருக்கு சென்றார்.
அங்கிருந்த புதுச்சேரி, குமரகுருபள்ளத்தை சேர்ந்த அங்கப்பன்,53; மற்றும் அவரது நண்பர்களான புதுச்சேரி, செட்டிக்குளம் தெரு, கங்கைமுத்து மகன் நடராஜன்,39; சண்முகா நகர், தாமோதரன் மகன் சிலம்பரசன்,23; ஒதியம்பேட், அலெக்சாண்டர் மகன் அலிஸ்டர்,29; ஆகியோர், இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். தட்டிக் கேட்ட அந்த பெண்ணின் கணவரை தாக்கினர்.இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார், நடராஜன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும், அவர்கள் மீது புதுச்சேரி சி.ஜே.எம்., கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பிரவின்குமார் ஆஜராகினார். வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், பெண்ணுக்க பாலியல் தொல்லை கொடுத்த நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அவரது நண்பர்கள் மூவருக்கும் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.