மதுரை : விவசாய குறைதீர் கூட்டத்தில் பொறுப்பற்ற முறையில் பதிலளித்த மேலுார் துணைத் தாசில்தார் பூமாரியை 'கெட் அவுட்' சொன்ன கலெக்டர் அனீஷ்சேகர் அவருக்கு 'மெமோ' வழங்க உத்தரவிட்டார்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ. சக்திவேல் கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி வேளாண் இணை இயக்குநர் விவேகானந்தன் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராணி பங்கேற்றனர்.
மலைச்சாமி தும்பைபட்டி:கருப்பன் மந்தை கருப்பன் உலகப்பன் வல்லமிச்சான் கண்மாய்களுக்கான வரத்து கால்வாயை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதால் வயலில் தண்ணீர் தேங்குகிறது. ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும்.
சதாசிவம் அச்சம்பத்து:ஏற்குடி அச்சம்பத்து பகுதியில் 100 ஏக்கர் நிலத்தில் காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. விளைநிலங்களையும் பயிர்களையும் சேதப்படுத்துகிறது.
பாண்டியன் தென்கரை:கேரளாவின் கொச்சியில் தென்னைக்கான மத்திய அரசின் வாரியம் உள்ளது. அதனை மதுரையிலும் கொண்டு வந்தால் தென்னை விவசாயிகள் பயன்பெறுவர்.
ராமச்சந்திரன் சொரிக்காம்பட்டி:சொரிக்காம்பட்டி கல்குவாரிகளில் வெடி வைத்து தகர்ப்பதால் சுற்றியுள்ள 12 கிராமத்தினர் அச்சத்துடன் வாழ்கிறோம். எந்நேரமும் கனரக வாகனங்கள் கல் மண்ணை அள்ளிச் செல்கின்றன.
பெரியகருப்பணன் மேலுார்:நாலுகுளம் கிராம சர்வேயில் அரசு ஊழியரே பாதையை ஆக்கிரமித்துள்ளார். மேலுார் தாசில்தாரிடம் நிலஅளவைப்பணி முடிந்தும் இன்னும் ஆக்கிரமிப்பை அகற்ற வில்லை.
முஜிபுர் ரகுமான் தென்பழஞ்சி:2019 ல் உயர்ரக மிளகாய் சாகுபடி செய்த போது வைரஸ் நோய் தாக்குதலால் நஷ்டம் ஏற்பட்டது. கத்தரி வெண்டை சாகுபடி செய்து மீண்டும் மிளகாய் பயிரிட்டேன். மறுபடியும் வைரஸ் தாக்குதல் உள்ளது.
ராமன் உசிலம்பட்டி:விளைநிலங்களுக்குள் காட்டுப்பன்றி வராமல் தடுக்கும் உயிரியல் திரவமருந்து தேவை என கடந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர். மதுரையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
'மெமோ' வழங்க உத்தரவு
மேலுாரில் கண்மாய் நீர்வரத்து கால்வாயில் அடுத்தடுத்து ஆக்கிரமிப்பு குறித்து விவசாயிகள் புகார் செய்த போது மேலுார் துணைத் தாசில்தார் பூமாரியிடம் கலெக்டர் பதில் கேட்டார்.
முதல் புகாருக்கு 'ஆக்கிரமிப்பாளரே காலி செய்வதாக சொன்னதால் நடவடிக்கை எடுக்கவில்லை' என்றார். அடுத்து கேள்வி கேட்டபோது 'ஆக்கிரமிப்பாளர் நெல் சாகுபடி செய்துள்ளார். வேறிடத்தில் நடுவதாக அவரே சொன்னார். நெற்பயிர் இருக்கும் போது ஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது என ஆர்.எஸ்.ஓ. 27 ல் உள்ளது. கலெக்டர் பரிந்துரை செய்தால் அகற்றலாம்' என்றார்.
எனக்கு கடிதம் கொடுத்தீங்களா என்று கேட்ட கலெக்டர் துணைத் தாசில்தார் பூமாரிக்கு 'மெமோ' கொடுக்க டி.ஆர்.ஓ. சக்திவேலுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து பூமாரியை 'கெட்அவுட்' சொன்ன கலெக்டர் 'தாசில்தார் வந்து தன்னை சந்திக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.
கலெக்டர் பேசியதாவது: காட்டுப்பன்றிக்கான உயிரியல் மருந்து திரவத்தை கூட்டுறவு கடன் சங்கத்தில் வாங்கி வைத்தால் விவசாயிகள் விலைக்கு வாங்குவர். சொரிக்காம்பட்டி கல்குவாரியின் செயல்பாடு குறித்து கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும். தென்னை விவசாயிகள் ஒருங்கிணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் தென்னை மேம்பாட்டுக்கு தீர்வு காணலாம். மிளகாயில் வைரஸ் குறித்து தோட்டக்கலை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து தரமான விதைகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.