கோவை : கோவை மாநகராட்சி கூட்டத்தில் முதல்வரை பற்றி இ.கம்யூ., பெண் கவுன்சிலர் பேசிய பேச்சால் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த அரசாணை, கோவை மாநகராட்சியில் மேயர் கல்பனா தலைமையில் நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில் பதிவு செய்வதற்காக தீர்மானமாக கொண்டு வரப்பட்டது. இதற்கு மா.கம்யூ., கவுன்சில் குழு தலைவர் ராமமூர்த்தி, அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன்,'மண்டல வார்டு குழுக்களுக்கும், வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுவுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க வேண்டும். துணை கமிஷனருக்கு வழங்கியுள்ள அதிகார பகிர்வை மண்டல தலைவர்களுக்கு வழங்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.
அப்போது, இ.கம்யூ., கவுன்சிலர் சாந்தி எழுந்து,''மாநிலங்களில் ஆளுனர்களுக்கு மட்டுமே அதிகாரம்; முதல்வருக்கு அதிகாரம் இல்லை' என, மத்திய அரசு கூறினால் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளுமா. நாம் எதிர்த்து குரல் கொடுக்க மாட்டோமா. மாமன்ற அதிகாரத்தை குறைத்து தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்திருப்பது முறையல்ல. அரசாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து, மண்டல தலைவர்(தி.மு.க.,) மீனா,''முதல்வரை பற்றி பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்,'' என்றார்.
மா.கம்யூ., கவுன்சிலர் ராமமூர்த்தி பேசுகையில்,''இது, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட அரசாணை. முதல்வரின் கவனத்துக்கு சென்றிருந்தால், இந்த அரசாணை வந்திருக்காது என நினைக்கிறேன். அவரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். தமிழக அரசு என சொல்வதற்கு பதிலாக முதல்வரை கவுன்சிலர் குறிப்பிட்டது தவறு என்பதை ஏற்றுக்கொள்கிறேன்,'' என்றார்.
மீண்டும் பேசிய இ.கம்யூ., கவுன்சிலர் சாந்தி,''முதல்வரை குறிப்பிட்டு பேசியதை 'வாபஸ்' பெற்றுக்கொள்கிறேன். அரசாணை வெளியிட்டது தவறு தான்,'' என, மீண்டும் அழுத்தமாக தனது வாதத்தை பதிவு செய்தார்.
வடக்கு மண்டல தலைவர் (தி.மு.க.,) கதிர்வேல் பேசுகையில்,''ஒளிவுமறைவின்றி, மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட வேண்டும் என்பதற்கான அரசாணை இது. முந்தைய காலகட்டங்களில் டெண்டர் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மறைக்கப்பட்டன. அனைத்து நிகழ்வுகளும் மன்றத்தில் பதிவு செய்ய வேண்டும் என்கிற நோக்கத்துடன் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது; சில குறைகள் இருக்கலாம்,'' என்றார்.