கோவை : ''ஓட்டுனர்கள் கவனக்குறைவால்தான் தமிழகத்தில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன,'' என்று, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
இதில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
தமிழகத்தில் இந்த ஆண்டு அக்., வரை நடந்துள்ள, 54 ஆயிரத்து, 56 விபத்துக்களில், டூ வீலர்களால், 45 சதவீதமும், நான்கு சக்கர வாகனங்களால், 21 சதவீதமும் நிகழ்ந்துள்ளன.
மாநில நெடுஞ்சாலைகளில், 35 சதவீதம், தேசிய நெடுஞ்சாலைகளில், 24, மாவட்ட சாலைகளில், 15 சதவீதமும் விபத்துக்கள் நடந்துள்ளன. இவற்றில், 14 ஆயிரத்து, 777 விபத்துகள், ஓட்டுனர் கவனக்குறைவால் நடந்தவை.
தமிழகத்தில் அதிக விபத்துகள் நடக்கும் இடங்களாக, 1,337 இடங்கள்(பிளாக் ஸ்பாட்) கண்டறியப்பட்டுள்ளன. விபத்துக்களுக்கு ரோடுகள் மோசமாக இருப்பது ஒரு முக்கிய காரணம்தான். மாநில நெடுஞ்சாலைத்துறையால் மட்டும் விபத்துகளை குறைக்க முடியாது; பல்வேறு துறைகளும் ஒருங்கிணைந்து எடுக்க வேண்டிய முயற்சியாகும்.
ரோடுகளில் அதிவேகத்தை கட்டுப்படுத்த, போக்குவரத்து துறையினர் மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை, திருவண்ணாமலை போன்ற கோவில்கள் அதிகம் உள்ள நகரங்களில், ரோடுகளில் மாடுகள் அதிகம் வலம் வருவதால் நிறைய விபத்துக்கள் நடக்கின்றன; அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
ரோடுகள் இணையும் இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும்; அதை இந்திய சாலைக்குழும (ஐ.ஆர்.சி.,) விதிகளின்படி அமைக்க வேண்டும். முறையான அளவில் அமைக்கப்படாத வேகத்தடைகளே விபத்துக்கு காரணமாகி விடுகின்றன. சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் அதிகளவில், டூ வீலர்கள் ஓட்டுகின்றனர். இதைக் கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேவைச்சாலைகள், நடைபாதைகள் அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தரமான முறையில் ரோடுகளை அமைப்பதுடன், 'ரிப்ளக்டர்' போன்றவற்றை தரமான பொருளாக பயன்படுத்த வேண்டும். பாதசாரிகள் கடக்கும் பகுதிகளில், ஒளிரும் வகையிலான கோடுகளை அமைக்க வேண்டியது நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களின் பொறுப்பாகும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நெடுஞ்சாலைத்துறை செயலர் பிரதீப் யாதவ், கோவை கலெக்டர் சமீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.