கோவை : ''கோவையில் தொழிற்பூங்கா அமைப்பதற்கு அரசு கட்டாயப்படுத்தி நிலம் எடுக்காது,'' என்று, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி கூறியுள்ளார்.
தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமான கோவை, தொழில் துறைக்கான தலைநகரமாகவே உள்ளது. இவ்வளவு வளர்ச்சி பெற்ற நகரில், 114 கி.மீ., துாரத்துக்கு மண் சாலை இருப்பதாக கிடைத்த தகவல் அதிர்ச்சி அளித்தது; பல ரோடுகள் மோசமாக இருந்தன. முதல்வரின் கவனத்துக்கு இதை கொண்டு சென்றோம். அவர் உடனடியாக கோவையில் ரோடுகளை சீரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளார். வரும் மார்ச் மாதத்துக்குள் இது விடுவிக்கப்படும்.
மாநில நெடுஞ்சாலைகளை சீரமைக்க, 211 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, இதுவரை, 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. கோவையின் தொழில் வளர்ச்சிக்கு விமான நிலைய விரிவாக்கம் அவசியம்.
அப்பணி ஆமை வேகத்தில் நடந்தது. அதற்கு பெருமளவு நிதியை முதல்வர் ஒதுக்கிய பின், இப்போது, 85 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம் செய்தால், தொழில் வளர்ச்சி வேகமெடுக்கும். தொழிற்பூங்கா அறிவிப்பை வெளியிட்டவுடன், இங்குள்ள விவசாயிகள் பலர் விவசாய நிலங்களை எடுக்க வேண்டாம் என்கிறார்கள். விவசாயம் செய்யும் பெற்றோர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தொழில் செய்யும் அவர்களின் வாரிசுகள், தொழிற்பூங்கா வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தி, தொழிற்பூங்காவுக்கு அரசு நிலம் எடுக்காது என்ற உறுதியை தெரிவிக்கிறோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.