சென்னை : ''சென்னை அண்ணா பல்கலையில், தொழில்நுட்ப தொகுப்பு மையமான 'ஐ.டி., ஹப்' அமைக்கப்பட உள்ளது,'' என, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
கருத்தரங்கில், மெய்நிகர் தொழில்நுட்பம் வாயிலாக உருவாக்கப்பட்ட காணொலி காட்சியை, அமைச்சர் வெளியிட்டார்.
பின், அவர் பேசியதாவது:
தொழில்நுட்ப வளர்ச்சியில் இதர மாநிலங்களை விட, தமிழகம் முன்னிலையில் உள்ளது. சி.ஐ.ஐ., நடத்தும் கருத்தரங்கம், ஒரு மைல் கல். இதுபோல பல நிகழ்ச்சிகள் நடத்துவதன் வாயிலாக, தமிழகத்தின் தொழில்நுட்பத் துறையை, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.
சென்னையில் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில், 'யு மேஜின்' எனும் மூன்று நாள் கருத்தரங்கம் நடக்க உள்ளது. இந்த கருத்தரங்கம் வாயிலாக, புதிதாக தொழில் துவங்க இருப்பவர்கள் பயனடைவர்.
சென்னை அண்ணா பல்கலையில், 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், தொழில்நுட்ப தொகுப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இதில், செயற்கை நுண்ணறிவு உட்பட, 13 புதிய தொழில்நுட்பங்கள் குறித்து, பயிற்சி மற்றும் உதவிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
நவீன தொழில்நுட்ப துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த அறிக்கையை, அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் நீரஜ் மிட்டல், சி.ஐ.ஐ., சென்னை தலைவர் முருகவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.