சூலுார் : "ஒவ்வொரு கிராம மக்களும், நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்," என, அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கல்வி, சுகாதாரம், வேளாண், தோட்டக்கலை, வருவாய், ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட புள்ளியியல் அலுவலர் ரவி பேசியதாவது:
முன்பெல்லாம் மாநில, மாவட்ட அளவில் மட்டுமே நீடித்த நிலையான வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, வட்டார அளவில் வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. எந்த பகுதிகளிலும் வறுமை இல்லை என்ற சூழல் உருவாக்க வேண்டும். அனைத்து மக்களும் ஆரோக்கியம், உடல் நலம் பேண முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
சுத்தமான நீர், சுகாதாரம் கிடைக்க வேண்டும். பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் பாதிப்புகளால், மக்களுக்கு ஏற்படும் தாக்கங்களை குறைக்க வேண்டும்.
பெண்கள் முன்னேற்றத்துக்கான உத்திகளை வகுக்க வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பாலின சமத்துவம் உள்ளிட்ட, ஐ.நா., சபை வலியுறுத்தி வரும், 17 இலக்குகளை அடைய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட புள்ளியியல் துறை துணை இயக்குனர் இசக்கியப்பன், சூலுார் வட்டார ஆய்வாளர் சவிதா, சுல்தான்பேட்டை வட்டார ஆய்வாளர் கோபிநாத் ஆகியோர் பங்கேற்றனர்.