பல்லடம்: விசைத்தறி தொழிலில் ஏற்பட்ட பின்னடைவால் தொழிலாளர்கள் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர், கோவை மாவட்டங்களில், 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் மூலம், தினசரி ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தியாகின்றன. சமீப நாட்களாக, ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால், குறைவான விசைத்தறிகளே இயங்குகின்றன. இச்சூழலில், பாவு நுால் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளதால், விசைத்தறி துணி உற்பத்தி மேலும் குறையக்கூடும்.
பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் அபாயத்துடன், தொழிலாளர்கள் மாற்று தொழிலுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சு, நுால் விலை ஏற்ற, இறக்கங்கள் மற்றும் மின் கட்டண உயர்வாலும் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளி தொழிலை பாதுகாக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
உற்பத்தி குறைப்பு!
ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறுகையில்,''பஞ்சு, நுால் விலை ஏற்ற இறக்கங்களால், துணிகளின் விலையை நிர்ணயிக்க முடிவதில்லை. வட மாநிலங்களில் துணிகள் விற்பனை குறைந்துள்ளது. பஞ்சு, நுால் விலையை சீராக்கவும், மின் கட்டணத்தை குறைக்கவும் மத்திய, மாநில அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தி வருகிறோம். நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால், மார்க்கெட் நிலவரம் பழைய நிலைக்கு திரும்பும் வரை, உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.