ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆத்துார்: சொக்கநாதபுரத்தில், ஆத்துார் தாசில்தார் மாணிக்கம் தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, ஏரி நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்த, 50 சென்ட் நிலத்தை மீட்டனர். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, வருவாய்த்துறையினர் எச்சரித்தனர்.
ரூ.1 லட்சம் வழங்கல்
ஆத்துார்: புதுப்பேட்டையில் நகராட்சி மயானத்தில் உள்ள எரிவாயு தகன மேடை, சுற்றுச்சுவர், குடிநீர் உள்ளிட்ட விரிவாக்க பணி, நமக்கு நாமே திட்டத்தில், 40 லட்சம் ரூபாயில் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு ஆத்துார் ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், தலைவர் பிரபாகரன் நேற்று, நகராட்சி தலைவர் நிர்மலாபபிதாவிடம், ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். நகராட்சி கமிஷனர் வசந்தி, கவுன்சிலர்கள் உள்பட பலர்
பங்கேற்றனர்.
உடும்பு வேட்டை; 2 பேர் கைது
ஆத்துார்: கெங்கவல்லி வனச்சரகம், சொக்கனுார் வனப்பகுதியில் நேற்று வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் 'ரோந்து' பணியில் ஈடுபட்டனர். அப்போது, இரு உடும்புகளை வேட்டையாடிய இருவரை பிடித்து விசாரித்தனர். அதில் ஆணையாம்பட்டி, எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்த பரமசிவம், 26, மூர்த்தி, 19, என தெரிந்தது. இதுகுறித்து கெங்கவல்லி வனத்துறையினர் வழக்குப்பதிந்து, ஆத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமசிவம், மூர்த்தியை சிறையில் அடைத்தனர்.
கொசு ஒழிப்பு இயந்திரம் வழங்கல்
ஆத்துார்: நரசிங்கபுரம் நகராட்சியில் கொசு ஒழிப்பு இயந்திரம், உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது, நகராட்சி தலைவர் அலெக்சாண்டர், துாய்மை பணியாளர்களிடம், 13.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கொசு ஒழிப்பு இயந்திரங்கள், மருந்து, உபகரணங்களை வழங்கினார். கமிஷனர் சம்பத்(பொ), துணை தலைவர் தர்மராஜ், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
பா.ஜ., ஆலோசனை கூட்டம்
பனமரத்துப்பட்டி: வீரபாண்டி சட்டசபை தொகுதி, பா.ஜ., பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம், நேற்று பனமரத்துப்பட்டி பிரிவு அருகே நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் நரேந்திரன், வீரபாண்டி தொகுதி பொறுப்பாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர். அதில் பார்லிமென்ட் தேர்தலுக்கு, ஓட்டுச்சாவடியை பலப்படுத்துதல் குறித்து ஆலோசித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்னுராஜ், மாவட்ட செயலர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கலைநிகழ்ச்சியில் 1,500 பேர்
ஓமலுார்: பள்ளி கல்வித்துறை சார்பில், ஓமலுார் வட்டாரத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியருக்கு நேற்று முன்தினம் கலை திருவிழா தொடங்கியது. ஓமலுார் வட்டார வள மேற்பார்வையாளர் தனுஜா தலைமை வகித்தார். காமலாபுரம் நடுநிலைப்பள்ளியில் நடந்து வரும் விழாவில் குழு, தனி நடனம், கருவி இசைத்தல், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரு நாளாக நடந்த விழாவில், 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், திறமைகளை வெளிப்படுத்தினர். இன்று மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் நிகழ்ச்சி நடக்கிறது.
அதேபோல் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவில் கலைத்திருவிழா நடந்தது. வட்டார மேற்பார்வையாளர் ராணி தொடங்கிவைத்தார். அதில், பாரம்பரிய நடனம், பரத நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அதேபோல் ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார கலைத்திருவிழா நடந்தது.
நகராட்சி கவுன்சிலர்
கூட்டம் ஒத்திவைப்பு
மேட்டூர், டிச. 1-
மேட்டூர் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடக்கவிருந்தது. அதற்கு சற்று நேரத்துக்கு முன், நகராட்சி அலுவலகம் எதிரே, தி.மு.க., கவுன்சிலர் வெங்கடாஜலம் மீது, மர்ம நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இச்சம்பத்தால், கவுன்சிலர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, நகராட்சி கமிஷனர் புவனேஸ்வரன் தெரிவித்தார்.
ரேஷன் அரிசி பறிமுதல்
சகோதரர்கள் கைது
சேலம், டிச. 1-
சேலம், செவ்வாய்ப்பேட்டை, நரசிம்மன் சாலையை சேர்ந்த சேகர் மகன் ரமேஷ், 36. இவரது தம்பி வெங்கடேஷ், 34. இருவரும் கருங்கல்பட்டியில் உள்ள, குட்டி வீட்டில் இருந்து சரக்கு ஆட்டோவில், 15 மூட்டைகளில் தலா, 50 கிலோ எடை என, 750 கிலோ ரேஷன் அரிசி; 24 மூட்டை, 600 கிலோ ரேஷன் அரிசியை, நெத்திமேட்டில் உள்ள அப்பள கம்பெனிக்கு எடுத்துச்சென்றனர்.
இதையறிந்த நுண்ணறிவு பிரிவு போலீசார், சரக்கு ஆட்டோவுடன் ரேஷன் அரிசி, மாவுடன், இருவரையும் பிடித்து செவ்வாய்ப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அவர்கள் அளித்த தகவல்படி, கருங்கல்பட்டியில், ரேஷன் அரிசியை மாவாக மாற்றும் குட்டியின் வீட்டில் செவ்வாய்ப்பேட்டை போலீசார் சோதனை நடத்தினார். அங்கு பதுக்கி வைத்திருந்த, 24 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள குட்டியை தேடி வருகின்றனர்.
இரவு 8:30 மணி வரை
காந்தி மைதானத்தில் அனுமதி
சேலம், டிச. 1-
சேலம் கலெக்டர் அலுவலகத்தில், விளையாட்டு, உடற்தகுதி, இளைஞர் நலன் மேம்பாடு நிலைக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட அளவில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்து பேசியதாவது:
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் இனி நடத்தப்படும் விளையாட்டுக்கு, www.sdat.tn.gov.in என்ற இணையதளம், TNSPORTS ஆடுகளம் செயலியில் விபரங்களை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிராமத்தில் திறமையான வீரர்களை கண்டறிந்து அவர்களது நன்மைக்கு விளையாட்டு கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி, அனைத்து விளையாட்டுக்கும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை பயன்படுத்த வேண்டும். மாவட்டத்தில் வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவில் விளையாடும் அளவுக்கு உடற்திறன் தகுதியை மேம்படுத்த விழிப்புணர்வு ஆலோசனை வழங்க வேண்டும்.
சேலம் மகாத்மா காந்தி மைதானத்தில் மாலை, 4:00 மணி முதல், இரவு, 8:30 மணி வரை அனுமதிக்கப்பட்ட நேரங்களில், விளையாட்டு வீரர்கள், மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கழிப்பறையில் ரூ.25 ஆயிரம்
உரியவரிடம் ஒப்படைப்பு
சேலம், டிச. 1-
சேலம் அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவு கழிப்பறை நுழைவாயிலில், நேற்று காலை, 9:00 மணிக்கு மணி பர்ஸ் கிடந்தது. அதை நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே ஈச்சங்காட்டை சேர்ந்த ராஜேஷ், 39, என்பவர் எடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலாளியிடம் ஒப்படைத்தார். அவர், மருத்துவமனை புறக்காவல் நிலைய எஸ்.ஐ.,யிடம் வழங்கினர். அதில், 25 ஆயிரம் ரூபாய், மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டு இருந்தன. விசாரணையில் அதன் உரிமையாளர் சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே பாப்பம்பட்டியை சேர்ந்த கண்ணன், 52, என தெரிந்தது. இதையடுத்து, துணை கமிஷனர் லாவண்யா முன்னிலையில், கண்ணனிடம் மணி பர்ஸ் ஒப்படைக்கப்பட்டது.
பெட்ரோல் ஊற்றி தீ
வைத்துக்கொண்டவர் பலி
சேலம், டிச. 1-
சேலம், இரும்பாலை அருகே சத்யா நகரை சேர்ந்த வேலாயுதம் மகன் சிவகுமார், 33. கூலித்தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை, 30. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. கடந்த நவ., 23 இரவு, வழக்கம்போல் சண்டை நடந்த நிலையில், ஆத்திரமடைந்த சிவகுமார், உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். படுகாயத்துடன் அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
வீரபாண்டி, டிச. 1-
ஆட்டையாம்பட்டி அருகே முத்தனம்பாளையத்தில் ராஜகணபதி, சின்ன மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. கணபதி வழிபாடு, சங்கல்பம், முதல் கால யாக பூஜை உள்ளிட்டவையும் நடந்தது. சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நேற்று காலை இரண்டாம் காலை யாக பூஜையுடன் நாடி சந்தனம், பூர்ணாஹூதியுடன் கடம் புறப்பாடு நடந்தது. இதையடுத்து ராஜகணபதி, மாரியம்மன் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மாரியம்மனுக்கு பால், மோர், தயிர், பன்னீர், இளநீர் உள்பட, 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
மின் இணைப்பு - ஆதார் எண்
இணைக்க டிசம்பர் வரை முகாம்
சேலம், டிச. 1-
மின் இணைப்பு எண் - ஆதார் எண் இணைக்க, டிசம்பர் வரை அனைத்து நாளும் சிறப்பு முகாம் நடக்கிறது.
வீடுகள், கைத்தறி, விசைத்தறி, குடிசை, விவசாய மின் இணைப்புதாரர்கள், மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம் நடக்கிறது. சேலம் மின் பகிர்மான வட்டத்தில் கடந்த, 28ல் தொடங்கிய முகாம், டிச., 31 வரை ஞாயிறு உள்பட அனைத்து நாளும், காலை, 10:30 முதல் மாலை, 5:15 மணி வரை நடக்கிறது.
முகாமை மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு, மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏரி நீரால்
மக்கள் அவதி
மகுடஞ்சாவடி, டிச. 1-
மகுடஞ்சாவடி அருகே அ.தாழையூர் வரட்டேரி, சில மாதங்களாக பெய்த கனமழையால் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் அந்த ஏரி நீர், காளியம்மன்கோவில் அருகே உள்ள, 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சூழ்ந்து, சில வாரங்களாக தேங்கி நிற்கிறது. இதனால், வீடுகளின் சுவர்கள் வலுவிழந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் காணப்படுவதால், குடியிருப்பில் சூழ்ந்துள்ள ஏரி நீரை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தினர்.
துாய்மை பணியில் வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள்
சேலம், டிச. 1-
சேலம், இரும்பாலை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி(சி.பி.எஸ்.இ.,) என்.சி.சி., மாணவ, மாணவியர், 30 பேர், பாப்பம்பாடியில் உள்ள ஏரி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பை, பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி சுத்தப்படுத்தினர். தேசிய மாணவர் படையின் புனித சாகர் அபியான் திட்டத்தில், இப்பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் நீர்நிலைகளை துாய்மையாக பராமரிக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளி முதல்வர் விக்டர் சகாயநாதன், தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் பியாடிரிக்ஸ் நிர்மலா ஆகியோர், மாணவ, மாணவியரை ஒருங்கிணைத்து செயல்பட வைத்தனர்.
சிறுமியிடம் சில்மிஷம்
வாலிபருக்கு ஆயுள் சிறை
சேலம், டிச. 1-
சேலம், நெய்க்காரப்பட்டி, கிழக்கு வட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பிரபு, 36. இவர், 2017ல் அதே பகுதியை சேர்ந்த, 8 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி, ஓராண்டுக்கு பின் இறந்து விட்டார். வழக்குப்பதிவு செய்த கொண்டலாம்பட்டி போலீசார், பிரபுவை கைது செய்தனர். வழக்கை விசாரித்த, நீதிபதி ஜெயந்தி, நேற்று பிரபுக்கு ஆயுள் தண்டனையுடன், 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேட்டூர் நீர்மட்டம்
118 அடியாக சரிவு
மேட்டூர், டிச. 1-
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை சரிவால், மேட்டூர் அணை நீர்வரத்து சரிந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 12 ஆயிரத்து, 226 கனஅடியாக இருந்தது. மாலை, 4:00 மணிக்கு, வினாடிக்கு, 10 ஆயிரத்து, 223 கனஅடியாக மேலும் சரிந்தது. டெல்டா பாசனத்துக்கு, அணையில் இருந்து, 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. கிழக்கு, மேற்கு கால்வாய் வழியே, 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அணை நீர்மட்டம், 118.90 அடியாகவும், நீர் இருப்பு, 91.72 டி.எம்.சி.,யாகவும் சரிந்துள்ளது.
அரசு கேபிள் 'டிவி'யில்
உலக கோப்பை ஒளிபரப்பு
சேலம், டிச. 1-
உலக கோப்பை கால்பந்து போட்டி, கடந்த நவ., 20ல் தொங்கியது. அதன் ஒளிபரப்பு, அரசு கேபிள், 'டிவி'யில் சில நாட்கள் மட்டும் தெரிந்தது. 3 நாளாக நிறுத்தப்பட்டதால், கால்பந்து ரசிகர்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டது. இதுகுறித்து பேச்சு நடந்து வருவதாக, ஆப்பரேட்டர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்று, அரசு கேபிள், 'டிவி'யில், எண்: 229ல், மீண்டும் ஒளிபரப்பு தொடங்கியது.
சேலம் - கோவை ரயில் ஒரு மாதத்துக்கு ரத்து
சேலம், டிச. 1-
சேலம் - கோவை மெமு ரயில் ஒரு மாதத்துக்கு ரத்து
செய்யப்படுகிறது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: வாஞ்சிபாளையம் - சோமனுார் இடையே ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் கோவை - சேலம் மெமு ரயில் இரு மார்க்கத்திலும், டிச., 31 வரை ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் டிச., 1(இன்று) முதல், 3 நாளுக்கு ரயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில், ஆலப்புழாவில் இன்று காலை, 6:00 மணிக்கு பதில், காலை, 9:00 மணிக்கு புறப்படுகிறது. எர்ணாகுளம் - பெங்களூரு எக்ஸ்பிரஸ், இன்று காலை, 9:10 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்பட வேண்டியது, காலை, 11:40 மணிக்கு புறப்படுகிறது.
கொதித்த குழம்பை மனைவி முகத்தில் வீசிய கணவர்
ஓமலுார், டிச. 1-
ஓமலுார் கருப்பணம்பட்டியை சேர்ந்த,
தொழிலாளி ராகவன், 42. இவரது மனைவி நித்யா, 37, மகள் நிவேதா. மது அருந்தும் பழக்கமுடைய ராகவன், கடந்த நவ., 22ல், போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம், தகராறில் ஈடுபட்டார். அப்போது, அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த குழம்பை எடுத்து மனைவி முகத்தில் வீசியுள்ளார். படுகாயம் அடைந்த நித்யா, ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் புகார்படி நேற்று ஓமலுார் போலீசார், ராகவன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.