ஈரோடு, டிச. 1-
ஈரோட்டில், அ.தி.மு.க., பஞ்., தலைவர், 12 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுக்கொண்டு திருப்பி தராமல், கொலை மிரட்டல் விடுப்பதாக, அ.ம.மு.க., மாநில அமைப்பு பெண் செயலாளர், எஸ்.பி.,யிடம் புகாரளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், நம்பியூர் தாலுகா, கெட்டிச்செவியூர், நிச்சாம்பாளையத்தை சேர்ந்த கருப்புசாமி மனைவி துளசிமணி, 46; இவர், அ.தி.மு.க.,விலிருந்து விலகி, அ.ம.மு.க., மாநில அமைப்பு செயலாளராக உள்ளார். நேற்று, ஈரோடு எஸ்.பி.,யிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் கெட்டிச்செவியூர் பஞ்., வார்டு உறுப்பினராக, 3 முறை இருந்துள்ளேன். கெட்டிச்செவியூர், அ.தி.மு.க., ஊராட்சி தலைவர் மகுடேஸ்வரன், என்னிடம், 2008 முதல் 12 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். தற்போது, பணத்தை திருப்பி கேட்டால், காலம் தாழ்த்தி வருகிறார். கடந்த, 9ம் தேதி மாலை ஊராட்சி அலுவலகத்துக்கு சென்று, மகுடேஸ்வரனை நேரில் சந்தித்து பணத்தை திருப்பி கேட்டபோது, பணம் கொடுக்க முடியாது எனக்கூறி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, நம்பியூர், சிறுவலுார் போலீஸ் ஸ்டேஷன்களில் ஏற்கனவே புகாரளித்துள்ளேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் பணத்தை மீட்டுத்தர வேண்டும். கொலை மிரட்டல் விடுத்த மகுடேஸ்வரன் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து, மகுடேஸ்வரனிடம் கேட்டபோது, ''அ.தி.மு.க.,வில் துளசிமணி இருந்தபோது, மாவட்ட மகளிரணி பதவி கேட்டு என்னை அணுகினார். ஆனால், பதவி கிடைக்கவில்லை. அ.தி.மு.க.,விலிருந்து விலகி, அ.ம.மு.க.,வில் இணைந்ததிலிருந்து, 6 ஆண்டுக்கும் மேலாக துளசிமணியுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. என் மீது அரசியல் உள் நோக்கத்துடன் பொய் புகாரளித்துள்ளார். அவர், எம்.எல்.ஏ., தேர்தலில் நின்ற போது, நான் ஆதரவு தெரிவிக்காததால், என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக புகார் கூறுகிறார். அவருக்கு சொந்த ஊரில் கூட செல்வாக்கு இல்லை. நானும் அவர் மீது சிறுவலுார் போலீசில்
புகாரளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.