ஈரோடு, டிச. 1-
ரேஷன் கடைகளில், காலிப்பணியிட நேர்முக தேர்வுக்கான அனுமதி சீட்டை, இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவர் ராஜ்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களின் ரேஷன் கடைகளில், 233 விற்பனையாளர், 10 கட்டுனர் பணியிடம் காலியாக உள்ளன. நேரடி நியமனம் மூலம் நிரப்ப, விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு வரும், 15 முதல், 22 வரையும், கட்டுனர் பணிக்கான நேர்முக தேர்வு, 23ம் தேதி ஈரோடு திண்டல், வித்யா நகரில் உள்ள ஈரோடு வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடக்க உள்ளது.
நேர்முக தேர்வுக்கான அனுமதி சீட்டு, இன்று முதல் ஈரோடு மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் www.drberd.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முக தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர், கல்வி தகுதி, முன்னுரிமை தகுதி, இதர தகுதிக்கான அசல் சான்றுகள், சுய ஒப்பமிட்ட, 2 நகல்கள், 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ, விண்ணப்ப கட்டணம் செலுத்தியதற்கான ரசீது நகலை சமர்பிக்க வேண்டும்.
அனுமதி சீட்டில் தெரிவித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால், 0424 2214378 என்ற தொலைபேசி எண், jrerd.drb@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு அறியலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.