ஈரோடு, டிச. 1-
ஆவின் நிர்வாகம், 500 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தில் உள்ளதால், பால் கொள்முதலுக்கான பணம் வழங்க, 3 மாதம் வரை காலதாமதமாகிறது. இதை கண்டித்து ஜன., 9ல் சென்னை ஆவின் முன், காத்திருப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
ஈரோட்டில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில குழு கூட்டம் தலைவர் முகமது அலி தலைமையில் நடந்தது. பின்னர் முகமது அலி நிருபர்களிடம் கூறியதாவது: தற்போதைய அரசு, ஆவின் பால் லிட்டருக்கு, 3 ரூபாய் விற்பனை விலையை குறைத்தது. இதனால் ஆவின் நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு, 300 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இத்தொகையை ஆவினுக்கு, அரசு வழங்க வேண்டும்.
பால் விலையை தலா, 10 ரூபாய் உயர்த்த கோரினோம். 3 ரூபாயை மட்டும் உயர்த்தினர். இதனால் மேலும், பல கோடி ரூபாய் ஆவினுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இந்த விலை உயர்வை யாரும் ஏற்காததால், ஆவினுக்கான பால் கொள்முதல் விலை அதிகரிக்கவில்லை. அதேநேரம், கால்நடை தீவனங்கள் அனைத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டன. எனவே பால் ஒரு லிட்டருக்கு, 10 ரூபாயாக உயர்த்தி, ஆவினுக்கான இழப்பு தொகையை வழங்க வேண்டும். ஆவின் நிர்வாகம், 500 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தில் இயங்குவதால், பல சொசைட்டிகள், 2 முதல், 3 மாதமாக பால் கொள்முதலுக்கான பணம் வழங்காமல் உள்ளன. கால்நடை தீவனத்தை மானிய விலையில் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காததாலும், பால் விலை அதிகம் என்பதாலும், தனியார் நிறுவனங்கள் பாலை கொள்முதல் செய்வது அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பால் லிட்டருக்கு, 2 ரூபாயும், குஜராத்தில் கூடுதல் தொகையும் ஊக்கத்தொகையாக வழங்குகின்றனர். அதுபோல, இங்கும் வழங்க வேண்டும்.
தனியார் மூலம் கிடைக்கும் முட்டையை வாங்கி சத்துணவில் வழங்கினால், சிலருக்கு பலன் கிடைக்கும். பொதுத்துறை நிறுவனமான ஆவினில் பாலை வாங்கி கொடுத்தால் பயன் கிடைக்காது என்பதால், அதனை தவிர்க்கின்றனர். இதை மாற்றி, சத்துணவு, அரசு மருத்துவமனைகளில் பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவினில் நிர்வாக சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன., 9ல் சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.சண்முகம், பால் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பி.பெருமாள், பொருளாளர் ஏ.எம்.முனுசாமி, மாநில நிர்வாகிகள் சங்கர், தீர்த்தகிரி, கே.சி.ராமசாமி, வெண்மணி சந்திரன் ஆகியோர் பேசினர்.