ஈரோடு, டிச. 1-
அன்னுாரில் விவசாய நிலங்கள் எடுக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இதன் மூலம் விளை நிலம், பவானி ஆற்று நீர், நிலத்தடி நீர் மாசுபாடு ஏற்படும் என, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன், முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: அன்னுார், மேட்டுப்பாளையம் தாலுகாவில், 6 பஞ்.,களில், 3,900 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது. என்ன திட்டம், யாருக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்ற விபரம் தெரிவிக்கவில்லை. தொழிற்சாலை நிறுவ, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து, நிலம், சாலை, மின்சாரம், பவானி ஆற்று நீரை தாரை வார்க்கக்கூடாது. தொழில் வளர்ச்சிக்காக, 6 பஞ்.,களில் உள்ள பல ஆயிரம் விவசாய மக்கள் வாழ்வாதாரத்தை இழப்பதை ஏற்க இயலாது.
பெருந்துறை சிப்காட் அமைந்தால் அப்பகுதியில், 400 ஏக்கரில் பாலத்தொழுவு குளம் முற்றிலும் மாசடைந்து, அப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் குடிநீர், நிலத்தடி நீர் முற்றிலும் மாசாகி, குடிக்க இயலாத நிலைக்கு வந்துள்ளது. சிப்காட் கழிவால், நொய்யல் ஆறும் மாசுபட்டுள்ளது. திருப்பூர் சாயக்கழிவால் நொய்யல் ஆறு பாதித்து, ஒரத்துப்பாளையம் அணை இன்றும் தண்ணீர் தேக்க முடியாத நிலைக்கு சென்றுவிட்டது. தவிர, அங்கு அமையும், சிப்காட் போன்ற தொழில்பேட்டைக்கு தேவையான நீரை, பவானி ஆற்றில் எடுக்க திட்டமிடப்பட்டதாக அறிகிறோம். அவ்வாறு தண்ணீர் எடுத்தால், பவானிசாகர் அணை, அதனை சார்ந்த அனைத்து பாசன நிலங்களும், குடிநீராதாரங்களும், நீர் நிலைகளும் பாதிக்கும். எனவே, இதுபோன்ற திட்டத்தை அரசு கைவிட வேண்டும். விவசாயிகளும் ஏற்க மாட்டோம்.