ஈரோடு, டிச. 1-
அரசு அறிவித்துள்ள ஊதியத்தை வழங்க மறுக்கும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு அரசு மருத்துவ
மனையில், 'குவாலிட்டி பிராப்பர்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தில், 132 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், துாய்மைப்பணி, காவல், நோயாளிகளை அழைத்து
செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவர்களுக்கு அரசு அறிவித்தபடி, நாள் ஒன்றுக்கு, 707 ரூபாய் வீதம் மாதம், 21 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்க வேண்டும். ஆனால், ஒப்பந்த நிறுவனம் அத்தொகையை முழுமையாக பெற்றுக்கொண்டு ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு, 280 ரூபாய் வீதம் மாதம், 8,400 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. அரசு அறிவித்துள்ளபடி முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த பல நாட்களாக அவ்வப்போது போராட்டம் நடத்தினர்.
ஒப்பந்த நிறுவனத்துடன் ஆளும் கட்சி தலையீடு உள்ளதால், கலெக்டர், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் போன்றோர் பேச்சுவார்த்தை மட்டும் நடத்துகின்றனர். முழு தொகையையும் பெற்றுத்தராத நிலையே தொடர்கிறது. இறுதியாக கடந்த, 3ல் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேசியும், உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று, தங்கள் பணியை புறக்கணித்து, முழு ஊதியம் வழங்க கோரி அரசு மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.