கோபி, டிச. 1-
மழை குறைந்ததால், இரண்டு நாட்களுக்கு பின், கொடிவேரி தடுப்பணையில், நேற்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஆட்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே, கொடிவேரியில், கடந்த நவ., 27 இரவு, 123 மி.மீ., பலத்த மழை பெய்தது. இதனால், தடுப்பணை வழியாக, மறுநாள் காலை, 8:30 மணிக்கு வினாடிக்கு, 2,400 கன அடி வரை, பவானி ஆற்றில் மழைநீர் வெளியேறியதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 28ல், 1,200 கன அடி தண்ணீர் வெளியேறியதால், இரண்டாம் நாளாக நேற்று முன்தினமும் தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, 3 மி.மீ., அளவுக்கு மட்டுமே மழை பெய்ததால், தடுப்பணை வழியாக வினாடிக்கு, 200 கன அடி தண்ணீர் மட்டுமே, வெளியேறியது. இதனால், இரண்டு நாட்கள் தடைக்கு பின், சுற்றுலா பயணிகள் நேற்று முதல் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், குறைந்த சுற்றுலா பயணிகளே வருகையால், கொடிவேரி தடுப்பணை வளாகம், நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.