கரூர், டிச. 1-
கரூர் அருகே, புகழூர் நகராட்சியில் வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கூறி, பா.ஜ., கவுன்சிலர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி கூட்டம் தலைவர் குணசேகரன் தலைமையில், நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. அப்போது 8வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் கோபிநாத், அவரது வார்டில் சாலை, குடிநீர், மின் விளக்குகள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என கூறி, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்த, நகராட்சி ஆணையர் கனிராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர் கோபிநாத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என, தெரிவித்தனர். இதையடுத்து, அவர் போராட்டத்தை கைவிட்டார். இதனால், புகழூர் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.