குளித்தலை, டிச. 1-
தோகைமலை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலையை அடுத்த, தோகைமலையில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில், தோகைமலை, கழுகூர், சின்னியம்பாளையம், நாகனுார், கீழவெளியூர், பாதிரிப்பட்டி, பில்லுார், பொருந்தலுார், புத்துார் பஞ்., பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
இங்கு நோயாளிகளுக்கு 30 படுக்கை வசதி உள்ளது. கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை வசதி உள்ளது. ஆனால், அறுவை சிகிச்சை அரங்கம் இல்லாததால் அந்த நோயாளிகள் மணப்பாறை, குளித்தலை, கரூர், திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். போதிய டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாததால் 30 படுக்கைகள் முழு பயன்பாடின்றி உள்ளன. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 8 டாக்டர்கள் இருக்க வேண்டிய நிலையில் 3 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். செவிலியர்கள் 16 பேருக்கு 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
தற்போது தினசரி மதியம் 2 மணி வரை தான் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் பிறகு வரும் நோயாளிகள், டாக்டர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். டாக்டர்கள் பற்றாக்குறையால், தற்போது பணியிலிருக்-கும் டாக்டர் பணி சுமையால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார். எனவே, தோகைமலை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தி, 24 மணி நேரமும் சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பற்றாக்குறையாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்புவது, கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை அரங்கம் ஏற்படுத்துவது, சாலை விபத்து நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சைக்கு தேவையான வசதி ஆகியவற்றை ஏற்படுத்த சுகாதார துறை, மாவட்ட நிர்வாகத்துக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.