மோகனுார், டிச. 1-
நாமக்கல் அருகே விவசாயி ஒருவரின் தோட்டத்தில், ஏழரை அடி உயரத்துடன் காய்த்து தொங்கும், அதிசய புடலங்காயை, கிராம மக்கள் ஆச்சர்யமாக பார்த்து செல்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் அருகே மேல் தோளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தாமரைசெல்வன், 60. இவர், தன் தோட்டத்தில் புடலங்காய் உள்பட பல்வேறு வகையான காய்கறிகளை சாகுபடி செய்துள்ளார்.
இங்கு புடலங்காய்கள், வழக்கத்தை விட, மிகவும் நீளமாக காய்க்கிறது. இதனால் அவர், புடலங்காய் கொடியை உயரமான கட்டடத்தின் மீது ஏற்றி வளர்த்து வருகிறார்.
கடந்த வாரம், அவரது தோட்டத்தில், 8 அடி நீளமுள்ள புடலங்காய் காய்த்துள்ளது. அதை பறித்து சந்தையில் விற்றுள்ளார். தற்போது, அவரது தோட்டத்தில் உள்ள கொடியில், ஏழரை அடி உயரமான, நாட்டு பச்சை புடலங்காய் காய்த்து தொங்குகிறது.
இது மேலும் வளர்ந்து வருகிறது. இந்த அதிசய புடலங்காயை, அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி தாமரைசெல்வன் கூறுகையில், ''இயற்கை உரங்களை கொண்டு விவசாயம் செய்கிறேன். நான் பயிரிட்டுள்ள கொடியில் வழக்கத்தை விட வேகமாக புடலங்காய்கள் வளர்கின்றன. ஆகையால், அருகில் உள்ள கட்டடத்தின் மேல் கொடிகளை படர விட்டுள்ளேன். வழக்கமாக புடலங்காய், ஒரு அடி முதல், 2 அடிவரை மட்டுமே வளரும். ஆனால், என் தோட்டத்தில், கடந்த வாரம், ஒரு புடலங்காய், 8 அடி உயரம் வளர்ந்தது. தற்போது, ஏழரை அடி உயரத்துக்கு மேல் வளர்ந்துள்ளது. அதன் அருகில், மற்றொரு காய், நான்கு அடி உயரத்தில் உள்ளது,'' என்றார்.