நாமக்கல், டிச. 1-
''நாமக்கல் மாவட்டத்தில், உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மற்றும் டிஜிட்டல் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும்,'' என்று கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு மாதாந்திர கூட்டம் நடந்தது. எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி முன்னிலை வகித்தார். கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி, கல்லுாரி நிறுவனங்களால் இயக்கப்படும் வாகனங்கள், உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் படி இயக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். விதிமுறைகளை முறையாக பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில், உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மற்றும் டிஜிட்டல் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். நகரப் பகுதிகளில், சாலை ஓரங்களில் கனரக வாகனங்கள் நிறுத்தி வைப்பதை தடுக்க வேண்டும்.
குறிப்பாக, பள்ளி, மருத்துவமனைகள் முன் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தி வைப்பதை தடுக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை, தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிப்பு ஏற்படக்
கூடிய பகுதிகளில், போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து, பேச்சு வார்த்தை நடத்தி, சுமூக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., மணிமேகலை, ஆர்.டி.ஓ.,க்கள் மஞ்சுளா, கவுசல்யா, டி.எஸ்.பி.,க்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர்
பங்கேற்றனர்.