திருச்செங்கோடு, டிச. 1-
போதுமான பணியாளர்கள் இல்லாமல், வேலைப்பளு அதிகமாக இருப்பதாக கூறி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு, 13 துப்புரவு பணியாளர்கள் பணியிடம் உள்ள நிலையில், தற்போது, ஏழு பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இந்நிலையில், துப்புரவு பணியாளர்கள் நேற்று மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
பணியாளர்கள் பற்றாக்குறையால் வேலைப்பளு அதிகம் உள்ளது. ஊதியமும் அரசு அறிவித்ததை விட, குறைவாக கொடுக்கின்றனர். மாதம் முழுவதும் விடுமுறை இல்லாமல் வேலை செய்தால் மட்டுமே, முழுசம்பளம் தருகின்றனர். கொரோனா காலத்தில் அரசு அறிவித்த பணப்பலன்கள் எதுவும் வழங்கபடவில்லை. இதுகுறித்து கேட்டால், வேலைக்கு வர வேண்டாம் எனக்கூறி அலுவலக அறையை பூட்டி மிரட்டுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
* நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 80-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தினசரி ஊதியம், 620 ரூபாய் வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ., பிடித்தம் செய்ததற்கான கார்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 25க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் நேற்று இரவு, மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
அங்கு வந்த நாமக்கல் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.