சென்னை, பெருங்குடி, கல்லுக்குட்டையைச் சேர்ந்தவர் கணேசன், 50. இவர், சில நாட்களுக்கு முன், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் குறித்து, வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.
தவிர, கணேசனுக்கும், அவரது வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்கு கடை நடத்தும் பிரபு என்பவருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில், இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட சண்டையில், பிரபு, கணேசனை தாக்கினார்.
இது தொடர்பாக, துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்த கணேசன், சிறிது நேரத்திற்கு பின் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
கணேசன், விஷம் குடிக்கும் முன், மொபைல் போன் வீடியோவில் பேசிய பதிவு, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதில், கணேசன் கூறியுள்ளதாவது:
சதுப்பு நிலத்தை, போலீசார் துணையுடன் சிலர் ஆக்கிரமித்து, ஏழை மக்களுக்கு விற்று வருகின்றனர்.
இது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தேன். உடனே, துரைப்பாக்கத்தில் உள்ள சில போலீசார் ஆதரவுடன், பிரபு உள்ளிட்ட சில ரவுடிகள் சேர்ந்து, என்னை தாக்கி நிர்வாணப்படுத்தினர்.
புகார் அளிக்க சென்றால், ரவுடிகளுக்கு சாதகமாக போலீசார் செயல்பட்டனர். இதனால், மிகவும் மனமுடைந்தேன். போலீசார், சமூக செயல்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்கின்றனர். கவர்னர் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
துரைப்பாக்கம் போலீசார் கூறியதாவது:
கணேசன், பிரபு இடையே நீண்ட நாட்களாக இடப்பிரச்னை உள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கியதால், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளோம்.
தரக்குறைவாக பேசி, ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கணேசன் கூறும், போலீசார் குறித்து விசாரிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.