ஆவடி, ஆவடி மாநகராட்சியில் அதிகரித்த மின் தேவையால், குறைந்த மின்னழுத்த பிரச்னைகளை தவிர்க்க, நான்கு வகையான புதிய மின்மாற்றிகள், மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டன.
ஆவடியில் சீரான மின் வினியோகத்தை உறுதி செய்யும் பொருட்டு, கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சில மின்மாற்றியில் அதிக மின் பளுவால், குறைந்த மின்னழுத்த குறைபாடு கண்டறியப்பட்டது.
சில இடங்களில் மின் பாதைகளின் நீளம் அதிகரித்துள்ளதால், ஒரே நேரத்தில் மின்சாதனங்களை பயன்படுத்தும் நுகர்வோருக்கு, மின்னழுத்த குறைபாடு ஏற்பட்டது.
இந்நிலையில், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு மற்றும் 41வது வார்டு காமராஜர் நகர், அன்புடைமை தெரு, பட்டாபிராம் பாபு நகர், திருமுல்லைவாயில் தென்றல் நகர், நேதாஜி தெரு, பள்ளிக்கூட தெரு ஆகிய நான்கு இடங்களில், 24 லட்சம் ரூபாய் மதிப்பில் மின்மாற்றி அமைக்கும் பணிகள் முடிந்ததை தொடர்ந்து, நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.
இதன் வாயிலாக, மேற்கூறிய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.