புளியந்தோப்பு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், சிதிலமடைந்த பழைய குடியிருப்பை இடிக்கும் பணி துவங்கியது.
சென்னை புளியந்தோப்பு, டாக்டர் அம்பேத்கர் கல்லுாரி சாலை, மாநகராட்சி ஆட்டிறைச்சி கூடம் அருகே, 1976ம் ஆண்டு கட்டப்பட்ட, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு உள்ளது. இதில், 'ஏ, பி' என இரண்டு 'பிளாக்'குகளில், 80 குடியிருப்புகள் இருந்தன.
கடந்த சில ஆண்டுகளாக, அவை போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து உறுதியிழந்தன. இந்நிலையில், அவற்றில் மக்கள் வசிப்பது ஆபத்தானது எனக் கருதி, அவர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து, அதே பகுதியில் உள்ள கே.பி., பார்க் பகுதியில், 4 மாதங்களுக்கு முன், அவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், சிதிலமடைந்த பழைய குடியிருப்பு கட்டடத்தை இடிக்கும் பணி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம், நேற்று முன்தினம் துவங்கியது.
நாளை மாலைக்குள் முழுமையாக இடித்து தரை மட்டமாக்கப்படும். அதன் பிறகு, அந்த இடம் சென்னை மாநகராட்சி நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும்.
மீண்டும் அங்கு, புதிய கட்டடம் கட்டப்படாது என்றும், மாநகராட்சி சாலை விரிவாக்கத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.