வானகரம்:வானகரம் சிவபூதமேட்டில், சாலை வெட்டிற்கான 1 கோடி ரூபாய் கட்டணத்தை மாநகராட்சிக்கு செலுத்தாமல், குடிநீர் வாரியம் சாலையில் பள்ளங்கள் தோண்டி பணிகள் மேற்கொண்டுள்ளது.
வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டு வானகரம் சிவபூதமேடு பகுதி ஊராட்சி பகுதியில் இருந்து, 2012ம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
இந்த பகுதிகளில் இன்னும் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதையடுத்து, குடிநீர் வாரியம் சார்பில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டன.
இதனால், சிவபூதமேடு இந்திரா நகர் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும், குண்டும் குழியுமாக மாறி உள்ளன. இவை மழைக்காலத்தில் அறுவடை முடிந்த வயல்வெளி போல காட்சியளிக்கின்றன.
இதில், சிவபூதமேடு பகுதியில் உள்ள 15 சாலைகளில், மாநகராட்சியிடம் சாலை வெட்டு பணிக்கு முறையாக அனுமதி பெற்று, அதற்கான கட்டணத்தை செலுத்தாமல், குடிநீர் வாரிய பணிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த வகையில், சாலை வெட்டு பணிக்காக, 1 கோடி ரூபாய் கட்டணத்தை, மாநகராட்சிக்கு குடிநீர் வாரியம் செலுத்த வேண்டியுள்ளது.
மேலும், பணிகளை முழுமையாக முடித்து தடையில்லா சான்றிதழ் வழங்காததால், சாலை அமைக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, குடிநீர் வாரியம் சார்பில் சாலை வெட்டு பணிக்காக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய பணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
அத்துடன், குடிநீர் வாரிய பணிகளை விரைந்து முடித்து, சாலை அமைக்க தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.