போரூர், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, போரூர் மேம்பாலம் அருகே உள்ள கட்டடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர 'பேனர்'கள் அகற்றப்பட்டன.
சென்னையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திரும்பும் வகையில் அமைக்கப்படும் விளம்பர பேனர்களால், ஏராளமான விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் நகரின் எந்த பகுதியிலும் விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என, கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், மீண்டும் பல இடங்களில் விளம்பர பலகைகள் முளைத்தன. சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட போரூர் மேம்பாலத்தைச் சுற்றி உள்ள கட்டடங்களில், அதிகளவில் ஆங்காங்கே விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து நம் நாளிதழில், சமீபத்தில் செய்தி வெளியானது. இதையடுத்து, போரூர் மேம்பாலம் அருகே உள்ள விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன.