வடபழநி, வடபழநி சோமசுந்தர பாரதி நகரில் வழிந்தோடும் கழிவு நீரால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கோடம்பாக்கம் மண்டலம், வடபழநி 135வது வார்டில், சோமசுந்தர பாரதி நகர் உள்ளது. இதில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதியில், வெங்கடேஷபுரம் சுடுகாட்டிற்குச் செல்லும் வழியில் சாலையை ஆக்கிரமித்து, மீன் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இதே சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது.
சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால், இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுவதுடன், துர்நாற்றம் மற்றும் தொற்று நோயால் பகுதிமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
புகார் அளித்ததும், குடிநீர் வாரியம் கழிவு நீர் அகற்றும் லாரி வாயிலாக அடைப்பை எடுத்து விடுகிறது. ஆனால், மீண்டும் இரு நாட்களில் கழிவு நீர் மேல் மூடி வழியாக கசிந்து, சாலையில் வழிந்தோடுகிறது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, குடிநீர் வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.