சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முன் இருக்கும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து ஈவ்னிங் பஜார் சாலைக்கு செல்ல புது சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளதால், ஓரிரு வாரங்களில் திறக்கப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சுற்றிலும் எப்போதும் வாகன நெரிசல், பயணியரின் வருகை அதிகம். இதற்கேற்ப, பல்வேறு புதிய வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே, பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை, பயணிருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இதேபோல், அரசு பொது மருத்துவமனையின் பின்புற நுழைவாயில் இருந்து, ஈவ்னிங் பஜார் சாலைக்கு செல்ல வசதியாக, 8 கோடி ரூபாய் செலவில், எஸ்கலேட்டர்கள் வசதியுடன் கூடிய சுரங்கப்பாதை அமைக்கும் பணி, சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
நுழைவு பகுதிகளில் தலா ஒரு எஸ்கலேட்டர் உள்ளிட்ட வசதிகளுடன், கட்டுமான பணிகள் முடிந்து, மின்சார ஓயர் பணிகளும், வர்ணம் பூசும் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
எனவே, அடுத்த ஓரிரு வாரங்களில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.