ஆவடி, ஆவடியில் கிடப்பில் போடப்பட்ட மழைநீர் வடிகாலில் மக்கள் குப்பை கொட்டுவதால், பணியை விரைந்து முடிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்பதாகை, சுற்றுவட்டார பகுதிகள் ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படும்.
சாலை சேதம்
அதை தவிர்க்கும் வகையில் நெடுஞ்சாலை துறை சார்பில், எச்.வி.எப்., எஸ்டேட் நுழைவு வாயில் முதல் கன்னடப்பாளையம் வரை, 3,937 அடிக்கு இருபுறமும் 11 கோடி செலவில், 5.5 அடி ஆழம், 5 அடி அகலத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் துவங்கின.
ஆவடி சுற்றுவட்டார பகுதியில் இருந்து வடியும் மழைநீர், வடிகாலில் பாய்ந்து, கன்னட பாளையத்தில் உள்ள இணைப்பு கால்வாய் வாயிலாக, கிருஷ்ணா கால்வாய் வழியே புழல் ஏரிக்கு பாயும்.
இதனால் கோவில்பதாகை சுற்றுவட்டார குடியிருப்புகள் மழை பாதிப்பில் இருந்து தப்பிக்கும்.
கடந்த மார்ச் மாதம் துவங்கிய இந்த பணி, ஜூலை மாதம் முடிக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக பணிகள், அரைகுறையாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இதனால், அங்குள்ள கோவில் பதாகை, பூம்பொழில் நகர், கலைஞர் நகர், கன்னடப்பாளையம் ஆகிய பகுதிகள், வெள்ளத்தால் பாதிப்படைந்து சாலைகள் சேதமடைந்தன.
வடகிழக்கு பருவ மழையால், கோவில்பதாகை ஏரி இரண்டு முறை நிரம்பி சாலையில் பாய்ந்து, மேற்கண்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.
பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
இது ஒருபுறம் இருக்க, 11 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, பாதியில் நிற்கும் மழைநீர் வடிகால் எந்த பயனும் இன்றி, அப்பகுதி மக்கள், சிறு வணிகர்கள் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது.
பல இடங்களில், கால்வாய்க்கு நடுவே நிற்கும் மின் கம்பங்கள் பல மாதங்களாக மாற்றி அமைக்காமல் உள்ளன. இந்த பணிகள் நிறுத்தப்பட்டதால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பயனில்லை
மின்கம்பம் அகற்றப்படாத இடத்தில் 'மெட்ரோ வாட்டர்' குழாய் வாயிலாக, தற்காலிகமாக இணைத்துள்ளனர்.
மேலும், அங்குள்ள சிறு வணிகர்கள் தங்கள் கடை முன்பு இருக்கும் மழைநீர் வடிகாலின் வெள்ளம் வடியும் பகுதியை மண் குவித்து மூடியுள்ளனர்.
இதனால், வெள்ளம் வடியாமல் சேறும் சகதியுமாக மாறியது.
வெள்ள பாதிப்பை தவிர்க்க அமைக்கப்பட்ட வடிகால், எந்த பயனுமின்றி பாதாள சாக்கடை போல் காட்சியளிக்கிறது.
எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் காலம் தாழ்த்தாமல், கிடப்பில் போடப்பட்டுள்ள பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.