தஞ்சாவூர்:ஒரத்தநாடு அருகே, தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு முடி திருத்த மறுத்ததாக, சலுான் கடைக்காரரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே, கிளாமங்கலம் தெற்கு தெருவில் உள்ள டீக்கடைகளில் இரட்டை குவளை முறை இருப்பதாகவும், முடித்திருத்தும் கடையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி திருத்தம் செய்ய மறுப்பதாகவும், ஒரத்தநாடு தாசில்தாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தாசில்தார் சுரேஷ் உத்தரவின்படி, கடைகளில் ஆய்வு செய்த வி.ஏ.ஓ., அங்கு தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்து அறிக்கை அளித்தார்.
புகார்
இந்நிலையில், கடந்த மாதம், 25ல் சலுான் கடையில் முடி திருத்தம் செய்ய சென்ற ஒருவரிடம், 'தாழ்த்தப்பட்டோருக்கு முடி திருத்த முடியாது' என, சலுான் கடையில் இருந்தவர் கூறினார்.
இதையடுத்து, அவர் மீது தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் சார்பில், பாப்பாநாடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதுபோல, மளிகை கடையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பொருட்கள் வழங்க மறுப்பதாக கூறி, சமூக வலைதளங்களில் 'வீடியோ' வெளியானது.
இந்நிலையில், தீண்டாமையை கடைப்பிடித்ததாக பாப்பநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, கிளாமங்கலத்தில் சலுான் கடை நடத்தி வந்த நம்பிவயல் கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து, 41, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
சதி வேலை
இது குறித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், 'இந்த கிராமத்தில், பல ஆண்டுகளாக டீ கடைகளில் இரட்டை குவளை முறையும், சலுான் கடையில் முடி வெட்ட மறுப்பதும், மளிகை கடையில் பொருட்கள் தர மறுப்பதும் நடக்கிறது' என்றனர்.
அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் கூறியதாவது:
சில நாட்களுக்கு முன், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த ஒருவர், மளிகை கடைக்கு போய், 'பெட்ரோல் வேண்டும்' என, கேட்டுள்ளனர்.
அந்த கடைக்காரர், 'பெட்ரோல் இல்லை' எனக் கூறியதை வீடியோவில் பதிவு செய்து, தீண்டாமை கொடுமை என, புகார் அளித்துள்ளனர். இந்த கிராமத்தில் அமைதியை சீர்குலைக்க சிலர் செய்யும் சதி வேலை தான் இது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.